பிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்! அத்தியாவசியமற்ற கடைகளுக்கும் பூட்டு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பாரிஸ் பிராந்தியத்தின் அனைத்து மாவட்டங்களும் அடங்கலாக நாடெங்கும் 16 மாவட்டங்களில் ஒருமாத காலத்துக்கு பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அரசு
இன்று அறிவித்திருக்கிறது.வாரத்தில் ஏழு நாட்களும் அது அமுலாகும்.

இல்-து-பிரான்ஸ்(Ile-de-France) பிராந்தியத்தின் எட்டு மாவட்டங்கள், நாட்டின் மேற்பிராந்தியத்தின் (Hauts-de-France) 5மாவட்டங்கள், மற்றும் Alpes-Maritimes, Seine-Maritime -Eure ஆகிய பிராந்தியங்களில் 3மாவட்டங்களுமாக 16 மாவட்டங் களில் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருவதாக பிரதமர்Jean Castex செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார்.

இந்த மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து நான்கு வாரங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன.ஆனால் பாடசாலைகள் அனைத்தும் வழமை போன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள், கடைகள்(Les commerces "non-essentiels") என்பன மூடப்படுகின்றன.கடந்த நவம்பரில் போன்று மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும்.
 
நாடு முழுவதும் தற்சமயம் அமுலில் உள்ள இரவு ஊரடங்கு நேரம் ஆறு மணியில் இருந்து ஏழு மணியாகப் பின்னகர்த்தப்படுகிறது. சனிக்கிழமை இரவு முதல் இந்த நடைமுறை ஆரம்பிக் கும்.

பகலில் வீடுகளுக்கு வெளியே நடமாட பொலீஸ் அனுமதிப் படிவத்துடன் கூடிய தளர்வான கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் வதிவிடத்தில் இருந்து 10 கிலோ மீற்றர்களுக்கு வெளியே நடமாடுவது அனுமதிக்கப்படமாட்டாது.

கட்டுப்பாட்டுக்குள் வருகின்ற 16 மாவட்டங்களிலும் வசிப்போர் நாட்டின் வேறு பிராந்தியங்களுக்கு பயணிப்பது தடைசெய்யப்படுகிறது. தொழில் நிமித்தம் பிராந்தியங்களிடையே பயணிக்க வேண்டியவர்களுக்கு அனுமதி உண்டு.( les déplacements inter-régionaux seront interdits sauf motifs impérieux ou professionnel).

இடைநிறுத்தப் பட்டிருந்த அஸ்ராஸெ னகா தடுப்பூசி ஏற்றும் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை மாலை முதல் மீள ஆரம்பிக்கப்படுகிறது.

சுமார் 12 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாரிஸ் பிராந்தியத்தை முடக்குவது சமூக, பொருளாதார ரீதியில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதால் தொற்று வீதம் கட்டு மீறிய பின்னரும் கூட அதனை முடக்குவதை கடைசி நிமிடம் வரை அரசு தவிர்த்து வந்தது.
 
பாரிஸ் பிராந்தியத்தில் வார இறுதி நாட்களில் மட்டுமே பொது முடக்கத்தைக் கொண்டுவர அரச உயர்மட்டம் ஆர்வம் கொண்டிருந்தது. எனினும் பிராந்திய மக்கள் பிரதிநிதிகளினதும் நகர சபைகளினதும் நிலைப்பாடுகள் அதற்கு எதிராக இருந்ததால் முழுமையாக ஏழு நாள்கள் முடக்கக் கட்டுப்பாடுகளை அறிவிக்க முடிவு செய்யப்பட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது.
Previous Post Next Post