யாழ்ப்பாணத்தின் கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் கொடிகாமம் வரணி எல்லைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பயனின்றி இரவு உயிரிழந்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி இரவு குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் கொடிகாமம் சென்றுவிட்டு வரணி நோக்கி செல்லும் போது வீதியால் சென்ற சைக்கிளுடன் மோதியே விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தினால் பலமாக அடியுண்ட இளைஞன் கோமா நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
வரணி தாவளை இயற்றாலையைச் சேர்ந்த தவராசா டிலோஜன் (வயது - 19) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து அதிவேகம் காரணமாக இடம்பெற்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
கொடிகாமம் பருத்தித்துறை வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக திறப்புவிழா நிகழ்வதற்கு முன்னரே நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை சுமார் 3 உயிரிழப்புக்களும் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.