
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக்கந்தன் வருடாந்த பெருந்திருவிழாவில் பங்கேற்பவர்களுக்கான நிபந்தனைகள் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அனைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்து 14 நிபந்தனைகள் உள்ளடங்கலாக மக்களுக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
அவற்றின் சாராம்சம் வருமாறு,
குழந்தைகள், முதியவர்களும் ஆலயத்திற்கு வருவதை முற்றாகத் தவிர்க்கவும்.
கொவிட் - 19 நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் வீதித்தடையில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அடியவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்ட அட்டைகளை வைத்திருக்கவேண்டும்.
அடியவர்கள் வேட்டியுடனும் பெண்கள் கலாசார உடைகளுடனும் வருதல் வேண்டும்.
சுகாதார நடைமுறைகளுக்கேற்ப அடியார்கள் ஆலயத்தினுள் வரையறுக்கப்பட்ட அளவில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் தேவஸ்தானத்தின் அறிவுறுத்தல்களின்படி அவர்கள் ஆலய வாளகத்தினுள் தரித்து நிற்கவோ அமர்ந்திருக்கவோ அனுமதிக்கப்படமாட்டார்கள். உரிய சமூக இடைவெளியுடன் வழிபாட்டை நடாத்திச் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
வீதித் தடை 11.08.2021 தொடக்கம் 08.09.2021 வரை முழுமையாக போடப்பட்டிருக்கும்.
ஆலயத்தினுள் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் சகல அடியவர்களும் முத்திரைச் சந்தியிலிருந்து பருத்தித்துறை வீதியால் மட்டுமே ஆலயத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். ஏனைய மூன்று வீதிகளும் ஆலயத்திற்குள் நுழைவதற்கு முழுமையாகத்தடை.
ஆலயச் சூழலில் உள்ளவர்களுக்கு அனுமதி அட்டைகளுடன் மட்டும் அனுமதி.
அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூரச்சட்டி, தூக்குக்காவடி போன்ற நேர்த்திக்கடன்கள், தாகசாந்தி, அன்னதானம் என்பன முற்றாகத்தடை.
சொற்பொழிவுகள், இசையரங்குகள், கலைநிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள், வியாபார நடவடிக்கைகள் முற்றாகத்தடை.
சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை.
உட்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.