யாழில் கோவிட்-19 நோய்த் தொற்றால் மேலும் ஆறு பேர் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது-26).

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நெடுந்தீவைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும் கந்தர்மடத்தைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அல்வாயைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவர் மந்திகை ஆதார மருத்துவமனையின் கோவிட்-19 விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை மருத்துவமனையில் ஒருவரது சடலமாக ஒப்படைக்கப்பட்ட நிலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவரது விவரங்களைப் பெற முடியவில்லை.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265ஆக உயர்வடைந்துள்ளது.
Previous Post Next Post