பிரான்ஸில் அதிபர் தேர்தல் களம்! மீண்டும் தலையெடுக்கிறது குடியேறிகள் தொடர்பான வாதம்!!


  • குமாரதாஸன், பாரிஸ்.
நாடு தொற்று நோயிலிருந்து மெல்ல விடுபட தேர்தல்க்களம் நோக்கிக் கவனம் திரும்புகிறது. கொரோனா, பருவநிலை மாற்றம் போன்ற விவகாரங்களை மீறிக் குடியேறிகள் தொடர்பான வாதங்கள் மீண்டும் தலையெடுக்கின்றன.

மக்கள் மத்தியில் தீவிர தேசியவாதக் கருத்துகளைப் பரப்பிவருகின்ற பிரபல ஊடகவியலாளர் எரிக் செமூர், வெளிநாட்டுக் குடியேறிகள் தொடர்பில் இறுதியாக வெளியிட்டிருக்கும் கருத்து பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

வெளி நாட்டவர்கள்-குறிப்பாக முஸ்லிம்கள்-அவர்களது குழந்தைகளுக்கு முதற் பெயராக (prénoms) பிரெஞ்சுப் பெயர்களைச் சூட்டவேண்டும். நாட்டின் அதிபராகும் பட்சத்தில் வெளிநாட்டுப் பெயர்களைத் தடைசெய்வேன்-என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாக செமூர் தெரிவித்த கருத்துகள் தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளன.

குழந்தைகளுக்கு"முஹம்மது" போன்ற முஸ்லிம் பெயர்களைச் சூட்டக் கூடாது என்று முதலில் கூறிய அவர் பின்னர் பொதுவாக வெளிநாட்டவர்கள் எவருமே அவ்வாறு தங்கள் நாட்டுப் பெயர்களை இடக் கூடாது என்று குறிப்பிட்டார்.முஹம்மது என்பது பிரிவினையை - வேறுபாடுகளை-குறிக்கின்ற பெயர் - என்றும் அவர் சொல்கிறார்.

வெளிநாட்டுப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விரும்பிய பெயர்களைச் சூட்டும் சுதந்திரத்தைத் தடுக்கின்ற அவரது இந்தக் கருத்துக்கள் பலத்த சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளன.
 
எரிக் செமூர் கடைசியாக எழுதிய "பிரான்ஸ் சொல்லாத அதன் இறுதி வார்த்தை" (La France n'a pas dit son dernier mot) என்னும் நூல் இந்தவாரம் வெளியாகவுள்ளது. இணையத்தில் பரபரப்பான விற்பனைக்குத் தயாராகிவருகின்ற அந்த நூலில் குடியேறிகள் தொடர்பான இது போன்ற மேலும் பல சர்ச்சைக்குரிய விடயங்கள் இடம்பெற்றுள்ளன என்ற தகவலை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.
 
பிரான்ஸில் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்ற ஓர் தீவிர வலதுசாரி எரிக் செமூர். அவரது கருத்துக்களோடு உடன்படாதவர்களும் அவரது தேசியவாதக் கருத்துக்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஊடாக விரும்பிக் கேட்கின்றனர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் கொண்டுள்ளதாக அவர் கூறிவருகிறார். அவரது திடீர் அரசியல் பிரவேச முஸ்தீபுகள் மற்றொரு தீவிர வலதுசாரியாக அறியப்படுகின்ற மரீன் லூ பென் அணியினரைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

சட்டம் என்ன சொல்கிறது? உங்கள் குழந்தைக்கு ஒரு பெயரைத் தெரிவு செய்யும் போது உங்கள் விருப்பம் போல் தீர்மானிக்க முடியுமா? பிரான்ஸின் சட்டங்கள் என்ன சொல்கின்றன?

1993 வரையான பிரான்ஸின் சட்டங்கள் குழந்தைக்குப் பெற்றோர் தாம் விரும்பிய பெயர்களைத் தெரிவு செய்வதை மட்டுப்படுத்திவந்தன. 1803 ஆம் ஆண்டின் சட்டம் என்று வரலாற்றாய்வாளர்கள் கூறும் சட்டங்கள் பண்டைய பஞ்சாங்கங்கள் - கலண்டர்கள் - குறிப்பிடுகின்ற பெயர்களையே அங்கீகரித்தன.அந்த நடைமுறை பின்னர் 1966 இல் தளர்த்தப்பட்டது. ஆனால் இப்போதும் கலண்டர்கள் கூறும் மாதங்களின் பெயர்களை அந்த மாதத்தில் பிறக்கின்ற குழந்தைகளுக்குச் சூட்டும் வழக்கம் இருக்கிறது.

1993 இல் இந்தச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டது. பெயர் சூட்டும் முழு சுதந்திரம் தற்போது பெற்றோரிடம் விடப்பட்டுள்ளது எனினும் "La ligue des officiers d'État civil" என்னும் அரச நிர்வாகக் குழு குழந்தைகளுக்குச் சூட்டக்கூடிய நல்ல பெயர்களைப் பட்டியலிட்டு வெளியிடுகிறது.

பெயரிடலில் சட்டம் முழு சுதந்திரத்தை வழங்கினாலும் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. ஒரு பெயர்"குழந்தையினது நலனுக்கு முரணானது" என்று கருதும் பட்சத்தில் சிவில் பதிவாளரால் அந்தப் பெயரை மாற்ற முடியாதவிடத்து அவர் அதனைக் குடும்ப நீதிமன்றத்துக்கு அறிவிக்கலாம்.

கடைசியாக நடந்த ஒரு சம்பவத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைக்கு "நியூட்டலா"("Nutella") என்ற சுவைமிகு சொக்கிலேற் உணவின் பெயரைச் சூட்டினர். இன்னுமொரு பெற்றோர் "Titeuf" என்ற நகைச்சுவைச் சினிமாப் படத்தின் பெயரைக் குழந்தைக்கு இட்டனர்.வளர்ந்த பிறகு குழந்தையைக் கேலிக்குள்ளாக்கலாம் என்ற காரணத் தால் நீதிமன்றம் அதில் தலையிட்டது.
Previous Post Next Post