நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது!


திருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் நாளை ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் அசேல குணவர்த்த வெளியிட்டுள்ளார்.

நாட்டில் ஓகஸ்ட் 20ஆம் திகதி இரவு நடைமுறைக்கு வந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறை நாளை ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் நிலையில் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை தேவையற்ற பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை முதலாம் திகதி தொடக்கம் வரும் 15ஆம் திகதிவரை பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் ஒக்டோபர் 16ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 31ஆம் திகதிவரை பின்பற்றவேண்டிய நடைமுறைகளும் என இரண்டு பிரிவுகளாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

புதிய வழிகாட்டுதல்களின்படி தனிநபர்கள் வேலை, மருத்துவ தேவைகள் அல்லது அத்தியாவசிய பொருள்களை வாங்குதல் மற்றும் சேவைகளை பெறுவதற்கு மட்டுமே தங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியும்.

கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் 25 சதவீத திறன் மட்டுமே அனுமதிக்கப்படும், அதே நேரத்தில் இணையவழி சந்திப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

விழாக்கள், விருந்துகள், உட்புற அல்லது வெளிப்புற கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

பொருளாதார மையங்களில் மொத்த வர்த்தகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பொருளாதார மையங்கள் பிரிவு குழுக்கள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையில் செயல்பட முடியும்.

1 முதல் 15 வரை உணவகங்களில் உணவருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 16ஆம் திகதி முதல் 31ஆம் வரை இருக்கை வசதியில் 30 சதவீதம் அனுமதிக்கப்படும். அதிகபட்ச வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 ஐ தாண்டாது இருக்க வேண்டும்.

இருப்பினும், திறந்தவெளியில் உணவு விநியோகம் ஊக்குவிக்கப்படுகிறது மற்றும் வளாகத்திற்குள் மது அருந்துவது தடைசெய்யப்படும்.

சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் சலூன்கள் செயல்படலாம்.

கல்வி அமைச்சின் முடிவின் அடிப்படையில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும்போது செயல்பாடுகளை மீண்டும் தொடங்கலாம்.

இருப்பினும், வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் மற்றும் நடவடிக்கைகள் இணையவழியில் கூட்டாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

தனியார் கல்வி வகுப்புகள் மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை.

15 ஆம் திகதி வரை விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படாது. திரையரங்குகள் மூடப்படும்.

நாளைமுதல் ஒக்டோபர் 15ஆம் திகதிவரை இறுதிச் சடங்குகளில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஒரே நேரத்தில் 10 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். 24 மணிநேரத்தில் இறுதிச் சடங்கு நடத்தி முடிக்கவேண்டும்.

ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதிவரை இறுதிச் சடங்குகளில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஒரே நேரத்தில் 15 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். 24 மணிநேரத்தில் இறுதிச் சடங்கு நடத்தி முடிக்கவேண்டும்.

ஒக்டோபர் 15ஆம் திகதிவரை பதிவுத் திருமண நிகழ்வுக்கு மட்டும் அனுதியளிக்கப்படுகிறது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மணமக்கள், உறவினர்கள், பதிவாளர் என 10 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.

ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரையான காலப்பகுதியில் திருமண நிகழ்வுக்கு இடவசதியில் 25 வீதமானோர் மட்டும் அனுதியளிக்கப்படுகிறது.அதாவது 50 பேருக்கு அதிகரிக்காமல் இருத்தல் வேண்டும்.
Previous Post Next Post