பிரான்ஸில் பிசிஆர் பரிசோதனைக்கு 44 ஈரோ! அன்ரிஜெனுக்கு 22 ஈரோ! ஓக்.15 முதல் நடைமுறைக்கு!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
பிரான்ஸில் வைரஸ் தடுப்பூசி ஏற்றிகொள்ளாதோர் மருத்துவரின் அனுமதி இன்றி வைரஸ் பரிசோதனை செய்வதாயின் இனிமேல் அதற்கான கட்டணத்தைச் செலுத்த நேரிடும். எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பிசிஆர்(PCR tests) பரிசோதனைக்கு 44 ஈரோக்களும் அன்ரிஜென்(antigenic tests) பரிசோதனைக்கு 22 ஈரோக்களும் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவரது சிபாரிசு (prescription) இல்லாமல் செய்யப்படுகின்ற பரிசோதனைகளுக்கு அறவிடப்படவுள்ள இந்தக் கட்டணங்களை சமூக மருத்துவக் காப்பீ ட்டு நிறுவனம் (la Sécurité sociale) மீளளிக்கமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தடுப்பூசி ஏற்றியோருக்கு இந்த நடைமுறையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அவர்கள் சுகாதாரப் பாஸைப் பயன்படுத்திப் பரிசோதனைகளை வழமை போன்று இலவசமாகச் செய்துகொள்ள முடியும். தொற்றாளர் ஒருவருடன் தொடர்புடையோருக்கும் அவர்கள் தடுப்பூசி ஏற்றியிருப்பின் பரிசோதனைக்குக் கட்டணம் அறவிடப்படமாட்டா.

தடுப்பூசி ஏற்றாதவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கட்டணத்தில் விதிவிலக்கு அளிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. வளர்ந்த உயர்தர மாணவர்கள் தொற்று அறிகுறி இருப்பின் 48 மணிநேரத்தினுள் மருத்துவர் ஒருவரிடமிருந்து பெற்ற பரிந்துரையுடன் இலவசமாகப் பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பளிக்கப்படவுள்ளது.

பரிசோதனைக் கட்டணங்கள் தொடர்பில் விரிவான விளக்கங்களை சமூக மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் (la Sécurité sociale)விரைவில் வெளியிடவுள்ளது.

சுய பரிசோதனைக் (self-tests) கருவிகள் மூலமான சோதனைகளுக்கும் விரைவில் கட்டணம் விதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை தற்போது நடைமுறையில் உள்ள சுகாதாரப் பாஸ் விதிகளில் நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்பாக எந்த விதமான தளர்வுகளோ மாற்றங்களோ செய்யப்படமாட்டா என்று அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் இன்று சுகாதாரப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார்.
Previous Post Next Post