ஒன்ராறியோவில் உணவக, பார்களுக்கான கட்டுப்பாடுகள் தொடரும்! உரிமையாளர்கள் அதிருப்தி!!


ஒன்ராறியோவில் உள்ள உணவகங்கள் மற்றும் பார்கள் தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களுடனேயே இயங்க அனுமதிக்கப்படும் என்ற மாகாண அரசாங்கத்தின் முடிவு குறித்து உணவகம் மற்றும் பார் உரிமையாளர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளனர்.

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், கச்சேரி அரங்கங்கள், குதிரை பந்தைய திடல்கள் மற்றும் கார் பந்தய திடல்கள் உள்ளிட்ட சில இடங்களில் முழுமையாகத் தடுப்பூசி பெற்றவர்கள் ஒன்றுகூடுவதற்கான திறன் வரம்பை எச்சரிக்கையுடன் நீக்கும் அறிவிப்பை ஒன்றாரியோ அரசு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் இந்த தளர்வு அமுலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் உணவகங்கள் மற்றும் பார்கள் தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களுடனேயே இயங்க அனுமதிக்கப்படும் என்ற மாகாண அரசாங்கத்தின் முடிவு நியமற்றது என கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உணவகங்களை வைத்திருக்கும் டினோ பியாஞ்சி தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயிலிருந்து மீளத் தொடங்கும் நேரத்தில் உணவகங்களை முழு திறனுடன் செயல்பட அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனவும் அவா் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் உணவகங்கள், பார்கள் மற்றும் பிற உணவு மற்றும் பான நிறுவனங்கள் சமூக இடைவெளியைக் பேணக் கூடியளவுக்கு வாடிக்கையாளர்களையே அனுமதிக்க முடியும் என ஒன்ராறியோ சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரா ஹில்கேனே தெரிவித்துள்ளார்.

உணவகங்கள், பார்கள் அதிக ஆபத்துள்ள அமைப்புகளாகும். மூடிய உட்புற இடங்களில் நீண்டநேரம் வாட்டிக்கையாளர்கள் நெருக்கமாக அமர்ந்திருப்பதுடன், இங்கு முககவசங்களை அகற்றும் சந்தா்ப்பங்கள் அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Previous Post Next Post