ஒமெக்ரோன் அலையைச் சமாளிக்க நாட்டை முடக்கியது நெதர்லாந்து!


  • குமாரதாஸன். பாரிஸ்.
நெதர்லாந்தில் இன்று அதிகாலை 5மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் பொது முடக்கக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உணவகங்கள், அருந்தகங்கள், அவசியமில்லாத கடைகள், உயர்கல்வி நிறுவனங்கள் என்பன அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி வரை மூடப்படுகின்றன.  இயன்றவரை வீடுகளில் தங்கியிருங்கள். 1.5 மீற்றர் இடைவெளி பேணுங்கள் என்று மக்களிடம்அரசு கேட்டிருக்கிறது.

ஒரு வீட்டுக்கு வளர்ந்தவர்கள் இரண்டு பேர் மாத்திரமே ஒருநாளில் விருந்தினராக வர முடியும். அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் போன்றவற்றை இரவு 20.00 மணிவரை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.  உள்ளக விளையாட்டரங்குகள், பொழுதுபோக்கு மையங்கள், சினிமா போன்றனவும் மூடப்படுகின்றன. 

கொரோனா வைரஸின் ஒமெக்ரோன் வடிவத்தின் தீவிரமான தொற்றலையை அடுத்துவருகின்ற நாட்களில் நாடு சந்திக்கின்ற நிலை ஏற்பட்டிருப்பதை அடுத்தே-ஐரோப்பாவில் முதல் நாடாகப்- பொதுமுடக்கத்தை (lockdown) நெதர்லாந்து அரசு அறிவித்திருக்கிறது.

முடக்கக் காலப்பகுதியில் பொது மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்ப்பதுடன் மூன்றாவது பூஸ்ரர் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கு இக்காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாட்டின் சுகாதார அமைச்சர் ஹியூகோ டி ஜொன்கே(Hugo de Jonge) கேட்டிருக்கிறார். பிரதமர் மார்க் ருட்டே(Mark Rutte) கூறுகையில், 

வரும் வாரங்களில் நாடு எதிர்கொள்ளவிருக்கும் தொற்று நிலைமையில் புதிய பொதுமுடக்கம் தவிர்க்க முடியாத ஒன்று எனத்தெரிவித்திருக்கிறார்.

வருடத்தில் மக்கள் பொருள்களைக் கொள்வனவு செய்கின்ற முக்கிய நாட்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றுக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன்பதாக நத்தார்ப் பொருள்களை வாங்குவதற்கு மக்கள் முண்டியடித்ததால் சில நகரங்களின் கடைத் தெருக்களில் நெரிசல் காணப்பட்டது. 

நகரின் மையப் பகுதிக்கு வந்து பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூட வேண்டாம் என்று றொட்டடாம்(Rotterdam) நகர நிர்வாகம் மக்களைக் கேட்டுள்ளது.

ஒமெக்ரோன் திரிபு அடுத்து வரும் வாரங்களில் ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்துகின்ற வைரஸாக மாறும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில் பல நாடுகளும் கட்டுப்பாடுகளை இறுக்கிவருகின்றன.
Previous Post Next Post