யாழில் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சியசாலையை அகற்றக் கோரி நாளை மக்கள் போராட்டம்!


யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதி, கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு அப்பக்தி மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.

யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதியில் கொட்டடி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான குறித்த களஞ்சிய சாலையை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரியே அப்பகுதியை சேர்ந்த மக்கள் நாளை காலை 9 மணிக்கு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அப்பகுதியை சேர்ந்த ஜே / 81 பிரிவை சேர்ந்த மக்கள் ஸ்ரீ மீனாட்சி சனசமூக நிலையம் ஊடாக குறித்த களஞ்சிய சாலை மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு உள்ளதாகவும் , களஞ்சிய சாலைக்கு முன்பாக கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதனால் , போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் , குறிப்பாக அருகில் உள்ள பாடசாலைக்கு நடந்து செல்லும் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டு , உடனடியாக அங்கிருந்து குறித்த களஞ்சியசாலையை அகற்றுமாறு , யாழ்ப்பாண பிரதேச செயலர் , யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் , நகர அபிவிருத்தி அதிகார சபை பிரதிப்பணிப்பாளர் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிப்பணிப்பாளர் உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டு ஆரம்பத்தில் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

குறித்த கோரிக்கையை , பிரதேச செயலர் கடந்த பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி மத்திய சுற்றாடல் அதிகாரசபை உதவிப்பணிப்பாளரை உரிய நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

அதேவேளை அப்பகுதி மக்களின் முறைப்பாட்டை அடுத்து நகர அபிவிருத்தி அதிகார சபை , எரிவாயு களஞ்சியத்தின் பாதுகாப்பு ஒழுங்குகள் அயலவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டும், ஆதனத்திற்குள் வாகனங்கள் தரித்து நிற்பதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அத்துடன் கட்டடத்திற்கான அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்பட்டிருந்தால் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என குறித்த களஞ்சியசாலை உரிமையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் , குறித்த களஞ்சிய சாலை உரிமையாளர், கடந்த ஆகஸ்ட் மாதமளவில், அயல் மக்களுக்கு இடையூறு செய்வதை கருத்தில் கொண்டு, மனிதாபிமான ரீதியிலும் இங்கு நடைபெறுகின்ற 50 வீதமான வாகன செயற்பாடுகளை வேறு இடத்திற்கு மாற்ற தீர்மானித்து உள்ளதாகவும், கோவிட்- 19 நிலமை காரணமாக 4 – 6 மாத கால அவகாசம் தேவைப்படும் எனவும் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அந்த நிலையிலேயே அப்பகுதி மக்கள் நாளைய தினம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
Previous Post Next Post