02 ஆம் இணைப்பு: நாடு முழுவதும் சுழற்சி முறையில் ஒன்றரை மணிநேர மின்வெட்டு!


  • இரண்டாம் இணைப்பு:
நாடுமுழுவதும் பொதுமக்கள் அடுத்த சில நாள்களுக்கு ஒன்றரை மணிநேர மின்வெட்டுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் அதன் முழு மின் விநியோகத் திறனைப் பெறுவதற்கு 3 நாள்கள் வரை ஆகும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

“நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் சிக்கலைச் சரி செய்வதில் கடினமான நேரத்தை எதிர்கொண்டுள்ளோம். இப்போது நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தடைப்பட்டுள்ளதால் நாடுமுழுவதும் உடனடியாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தின் காரணமாக சுமைகளை அகற்றுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

எனவே, அடுத்த 3-4 நாள்களுக்கு, இலங்கையில் உள்ள பகுதிகளில் சுமையை சமப்படுத்த ஒன்றரை மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் ”என்றும் அவர் கூறினார்.

மின்சாரத் தடையினால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தை கருத்தில் கொண்டு, வேலைநிறுத்தப் போராட்டத்தை, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தற்காலிகமாக மீளப் பெற்றுள்ளதாக விமலரத்ன மேலும் தெரிவித்தார்.
  • முதலாம் இணைப்பு:
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை மீண்டும் இயங்குவதற்கு மூன்று நாள்கள் தேவை என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரம் மற்றும் கொதிகலன் செயலிழந்துள்ள நிலையில் அதனை மீண்டும் செயற்படுத்த மூன்று நாள்கள் ஆகும் என்று இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

900 மெகாவோட் மின்தேவை காரணமாக நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் மின்சாரத் தேவையை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மின்சார விநியோகம் தடைபடலாம் என தெரிவித்த பொது முகாமையாளர், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் என நம்பிக்கை வெளியிட்டார்.
Previous Post Next Post