பிரான்ஸில் நாளை முதல் உணவகங்கள், அருந்தகங்களில் கட்டாயமாக்கப்படும் விதி!

  • குமாரதாஸன். பாரிஸ்.
உணவகங்கள்,(restaurants) அருந்தகங்களில்(bars) இலவசமாகக் குடி தண்ணீர் கிடைக்கக் கூடிய வசதிகள் செய்யப்பட வேண்டும். புத்தாண்டில் ஜனவரி முதல் திகதி தொடக்கம் இந்த விதி கட்டாயமாக்கப்படுகிறது. 

சுத்தமான-குடிப்பதற்கு உகந்த -தண்ணீரை விநியோகிக்கின்ற குறைந்தது ஒரு கருவியாவது (fontaine d'eau potable)உணவகங்களில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். 

குடிதண்ணீரை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்பது வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் அறிவுப்புச் செய்யப்பட்டிருக்கவேண்டும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது இதற்கு முன்பு கட்டாயமாக்கப்பட்டிருக்கவில்லை.

பொதுவாக உணவகங்களில் உணவுடன் அல்லது சிற்றுண்டியுடன் குடிப்பதற்கான தண்ணீரும் இலவசமாகக் - கட்டணமின்றி - வழங்கப்படுவது காலாகாலமாகப் பின்பற்றப்பட்டுவருகின்ற வழமை. ஆனால் சமீப காலமாக உணவுடன் மேசையில் வழங்கப்படுகின்ற தண்ணீருக்கும் சில உணவகங்களில் கட்டணம் அறவிடப்படுகின்றது.

தண்ணீரை ஒரு குவளை கூட இலவசமாகக் கொடுப்பதற்கு உணவகங்கள் பின்னடிக்கின்றன. தண்ணீர் போத்தல்களைக் கட்டணம் செலுத்தி வாங்கவேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது என்று நுகர்வோர் தரப்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இதனையடுத்தே இலவசமாகக் குடி தண்ணீர் பெறும் வசதி செய்யப்பட வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
Previous Post Next Post