பெயருக்குப் பின்னால் அப்பாவா? அம்மாவா? பிள்ளைகள் விருப்பப்படி மாற்றிக்கொள்ள பிரான்ஸில் வருகிறது சட்டம்!


  • குமாரதாஸன். பாரிஸ்.
வளர்ந்த பிள்ளைகள் தங்களது பெயருக்குப் பின்னால் அப்பாவின் பெயரை மட்டுமன்றித் தாயின் பெயரையும் குடும்பப் பெயராகச்(nom de famille) சேர்த்துக் கொள்வதை இலகுவாக்குகின்ற சட்டம் விரைவில் வரவிருக்கிறது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இவ்வாறு பெயர்த் தெரிவைத் தங்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்வதற்கு அனுமதிக்கும் சட்ட மூலத்தைப் பிரான்ஸின் நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ளது. குடும்பப் பெயர்த் தெரிவை இலகுவான வழிமுறை மூலம் மாற்றிக் கொள்ள வகை செய்கின்ற இந்தச் சட்ட மூலத்தை நாட்டின் நீதி அமைச்சர் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸில் குடும்பப் பெயரை மாற்றிக் கொள்வதற்கான உரிமை ஏற்கனவே உள்ளது. ஆனால் அதற்கான நிர்வாக நடைமுறைகள் இலகுவானவையல்ல. அதனை இலகுபடுத்துமுகமாகவே புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

புதிய சட்டம் தாயின் பெயரை மட்டும் அல்லது தந்தையின் பெயரை மாத்திரம் அல்லது இருவரது பெயர்களையும் குடும்பப் பெயராக இணைத்துக் கொள்வதை அனுமதிக்கும்.

தந்தையுடைய பெயர், அல்லது குடும்பப் பெயர் நம்மில் பெரும்பான்மையினருக்குப் பெருமையானதுதான். ஓர் அடையாளம், வரலாறு, நினைவு என்று அதற்குப் பல முக்கியத்துவங்கள் உள்ளன. ஆனால் சமூகத்தில் அதுவே பலருக்குப் குழப்பங்களையும் பல பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக உள்ளது. கணவனைப் பிரிந்த நிலையில் பிள்ளைகளைத் தனித்து வளர்க்கும் ஒரு தாய் தன்னை வெறுத்து விலகிய கணவரது பெயருடன் கூடிய பிள்ளைகளை வளர்க்க வேண்டிய சூழலில் பல சந்தர்ப்பங்களில் உளவியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்கிறது-என்பதை நீதி அமைச்சர் எரிக் டுபொன்ட் மொறெற்றி (Eric Dupond-Moretti) சுட்டிக்காட்டியுள்ளார்.

கணவனால், தந்தையால் மிக மோசமான வன்முறையைக் கொடுமைகளை அனுபவித்தவர்கள் தொடர்ந்தும் அவரது பெயரைத் தங்களது பெயருடன், பிள்ளைகளது பெயருடன் இணைத்தபடி வாழ வேண்டி உள்ளது.  அது பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

ஒரு கொலைகாரனான தந்தையின் பெயரைச் சுமப்பதற்குப் பிள்ளைகள் விரும்பாத போதிலும் நிர்வாகக் காரணங்களுக்காக அவரது பெயரைத் தொடர்ந்து பயன்படுத்த நேர்கிறது. விருப்பமின்றி அவ்வாறான சூழ் நிலையில் வாழ்கின்றவர்களுக்குப் புதிய சட்டம் மிகப் பயன்படும் என்று அதனை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.

விவாகரத்துகள், குடும்பப் பிரிவினைகள் அதிகரித்து வருவதால் குடும்பங்களில் குடும்பப் பெயர், அல்லது தந்தையின் பெயரைப் பயன்படுத்துவதிலும் பல பிரச்சினைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post