அரசியல் வங்குரோத்தை நோக்கி பிரான்ஸின் இடதுசாரிகள் அணி எதிரும் புதிருமாக ஏழு வேட்பாளர்கள்!


  • பாரிஸிலிருந்து குமாரதாஸன். 
பிரான்ஸில் ஈழத் தமிழர்கள் ஓரளவு நெருங்கிச் செயற்படுகின்ற அரசியல்கட்சிகளில் முக்கியமானது சோசலிஸக் கட்சி. தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற பாரிஸின் புற நகரங்களில் உள்ளூர் அதிகாரங்களைத் தக்க வைத்துள்ள இடது சாரிக் கட்சிகளின் கீழ்மட்ட அரசியல் பிரமுகர்கள் நீண்ட காலமாகத் தமிழ்த் தேசிய செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்துவருகின்றனர்.

கொரோனா நெருக்கடிக்குள் நடந்த நகரசபைத் தேர்தல்களில் பசுமைக் கட்சியும் சோசலிஸக் கட்சியும் கூட்டணியாகப் போட்டியிட்டதால் பல சபைகளை வெல்ல முடிந்தது. ஆனால் அதிபர் தேர்தல் களம் அவ்வாறு இல்லை. நாட்டின் தேசிய அரசியலில் சோசலிஸக் கட்சி உட்பட இடதுசாரிஅணிகள் பெரும் பின்னடைவை நோக்கிச் செல்கின்றன. ஏப்ரலில் நடைபெறவிருக்கின்ற அதிபர் தேர்தலில் பசுமைக் கட்சியை உள்ளடக்கிய இடது சாரிகள் தரப்பில் இருந்து எதிரும் புதிருமாக ஏழு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் அனைவருமே ஓரணியாகத் திரள்வதையும் பொது வேட்பாளராக ஒருவரைத் தெரிவு செய்வதையும் மனதார ஏற்கின்ற நிலையில் இல்லை.

தீவிர இடது சாரியான ஜீன்-லூக் மெலன்சோன் (Jean-Luc Mélenchon) பசுமைக் கட்சி வேட்பாளரான ஈவ்ஸ் ஜடோ (Yves Jadot), கம்யூனிஸ்ட் கட்சியின் ஃபேபியன் ரூசெல் (Fabien Russel), சோசலிஸக் கட்சியின் பாரிஸ் மேயர் ஆன் கிடல்கோ(Anne Hidalgo) ஆகியோர் முக்கிய இடதுசாரி வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர். இவர்களுடன் மற்றும் ஒரு முக்கிய புள்ளியாக முன்னாள் நீதி அமைச்சரும் பிரெஞ்சு கயானாவில் பிறந்தவருமாகிய கிறிஸ்டியன் தௌபிரா (Christiane Taubira) அம்மையாரும் மக்ரோனை எதிர்த்துக் களமிறங்கியுள்ளார். பிரான்ஷூவா ஹொலன்டின் சோசலிஸ அரசில் செல்வாக்குப் பெற்ற அமைச்சராக விளங்கியவர் அவர்.

இவ்வாறு அடிப்படையில் பிளவுபட்ட நிலையில் போட்டியிடவுள்ள இவர்களில் எவருமே பத்து வீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெறுகின்ற நிலையில் இல்லை என்பதைக் கணிப்புகள் காட்டுகின்றன. 2012 இல் பிரான்ஷூவா ஹொலன்ட் அதிபராகத் தெரிவாகிய தேர்தலில்நாட்டின் வாக்காளர்களில் 43.75 வீதமானவர்கள் பசுமைக் கட்சிகள் உட்பட இடதுசாரிக் கட்சிகளுக்கு வாக்களித்திருந்தனர். ஆனால் இந்தத் தடவை இடதுசாரி அணிகள் ஒட்டு மொத்தமாக 25 வீதத்துக்கும் குறைவான வாக்குகளை மட்டுமே பெறக்கூடிய அளவுக்குப் பின்தங்கியுள்ளன.

பிரான்ஷூவா மித்ரோனுக்குப் பிறகு அரசுத்தலைவராக வந்த பிரான்ஷூவா ஹொலன்ட் நாட்டின் சோசலிஸ்ட் அதிபர்களில் மிகவும் செல்வாக்குக் குறைந்தவராகக் கணிக்கப்பட்டவர். பதவியின் முதல் தவணைக் காலத்துடன் 2017 இல் மக்ரோனுக்கு வழி விட்டு விலகியவர் .

இதேவேளை நாட்டின் பழமைவாதிகள் நிலையும் முன்னாள் அதிபர் சார்க்கோசி க்குப் பின்னர் மங்கிப்போயே இருந்தது. ஆனால் இந்த முறை அவர்கள் பல உள் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் பொதுவாக்காளராக ஒருவரைத் தெரிவு செய்ததன் மூலம் பாரம்பரிய அரசியல் பாதையில் தாங்கள் மீண்டும் பலமான நிலையெடுத்திருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.அவர்களது பொது வேட்பாளரான வலெரி பெக்ரெஸ் நாட்டின் முதலாவது பெண் அதிபராகத் தெரிவாகக் கூடிய வலுவான நிலையில் உள்ளார். அவர் அதிபர் மக்ரோனுடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுகின்ற சாத்தியங்கள் இருப்பதைக் கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

வலதுசாரிகள் இவ்வாறு தேசிய அரசியலில் தங்களைச் சுதாகரித்துக் கொண்டு முன்னேறியுள்ள போதிலும் நாட்டின் இடதுசாரிகளது அரசியலும் உத்திகளும் படு வங்குரோத்தாகப் போய்க்கொண்டிருப்பதை அரசறிவியல் நிபுணர்கள் குறிப்பிட்டுக்காட்டுகின்றனர். அத்துடன் இடது சாரிகள் நாட்டின் கிராமங்களிலும் தொழிலாளர்கள் மத்தியிலும் செல்வாக் கிழந்துவிட்டனர். மஞ்சள் மேலங்கிப் போராட்டம் போன்ற தொழிலாளர் பிரச்சினைகளுக்குத் தங்களது தீர்வுகள் என்ன என்பதைத் திடமாகச் சொல்கின்ற திட்டங்கள் இடதுசாரிகளிடம் இல்லை. அவர்கள்கடந்த ஒரு தசாப்த்த காலத்தில் மக்கள் பிரச்சினைகளில் இருந்து தள்ளிப் போய்விட்டனர் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதிபர் தேர்தலுக்கு இன்னும் நூறுக்கும் குறைந்த நாட்கள் மாத்திரமே இருக்கும் நிலையில் இடதுசாரிகள் மத்தியில் ஒருமித்த இணக்கத்துக்கான எந்த அறிகுறிகளும் துளியும் தென்படவில்லை. பொது வாக்காளராக ஒருவரைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான முன் முயற்களில் இடதுசாரி அரசியல் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்கள் தங்களுக்குள் வேறுபாடுகளைக் கைவிட்டு ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ளன.அதை வலியுறுத்தி அபிமானிகள் சிலர் உண்ணாவிரதப் போரில் குதிக்கவும் முயன்றுள்ளனர்.

பிரான்ஸின் பாரம்பரியக் கட்சிகளான சோசலிஸக் கட்சியையும் முக்கிய வலது
சரியான ரிப்பப்ளிக்கன் கட்சியையும்-அவர்கள் மத்தியில் கவர்ச்சிகரமான தலைவர்கள் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப்-பின்னுக்குத் தள்ளிவிட்டுப் புதிய மையவாதக் கட்சி ஒன்றின் ஊடாக அதிரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றியவர் மக்ரோன்.இரண்டு கட்சிகளினதும் பல தசாப்த கால அரசியலால் சலிப்படைந்திருந்த வாக்காளர்கள் ஒரு மாற்றத்துக்காகவும் தீவிர வலதுசாரியாகிய மரின் லூ பென்னைத் தோற்கடிக்கக் வேண்டிய கட்டாயத் தெரிவு நிலையிலும் இளம் தலைவர் மக்ரோனுக்குத் தங்கள் வாக்குகளைச் செலுத்தி அவரை வெற்றிபெறச் செய்தனர்.ஆனால் 2017 இல் காணப்பட்ட அது போன்றதொரு அரசியல் கள நிலைமை இப்போது நிச்சயமாக இல்லை.

பெருந் தொற்று நோய்க்கு மத்தியில் நாட்டில் பழமைவாத வலதுசாரி அரசியல் அலை பலமாக வீசுவது போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.மரின் லூ பென் அம்மையாரை விஞ்சிய மற்றொரு தீவிர வலதுசாரி முகமாக விவாதவியலாளர் எரிக் செமூர் மெலெழுந்துள்ளார். அவர்கள் இருவரையும் விட மைய வலது சாரியாகிய வலெரி பெக்ரெஸ் அம்மையார் மக்ரோனுக்கு நேரெதிரே பெரும் சவாலாக நிற்கிறார்.

தேர்தலில் போட்டியிடுவாரா என்பதை அறிவிக்காமல் தனது முடிவை இப்போதுவரை சஸ்பென்ஸாகப் பேணி வருகிறார் மக்ரோன். "அவரது மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவதற்காக உங்களைப் போன்றே நானும் காத்திருக்கிறேன்" என்று மக்ரோனின் துணைவியார் பிரிஜித் அண்மையில் செவ்வி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Previous Post Next Post