பொங்கல் வாழ்த்துத் தெரிவித்த இங்கிலாந்துப் பிரதமர்! மகாராணியிடம் மன்னிப்புக் கோரியது பிரதமரின் அலுவலகம்!! (வீடியோ)

  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி இங்கிலாந்துப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நேற்று வாழ்த்துச் செய்தி ஒன்றை விடுத்திருக்கிறார். "மிகவும் அருமையான தமிழ்ச் சமூகத்தைக் கொண்டாடுகின்ற தருணம் இது" என்று தனது வீடியோச் செய்தி ஒன்றில் அவர் தெரிவித்திருக்கிறார். "தமிழர்கள் மிக நீண்ட காலமாக பிரிட்டிஷ் வாழ்க்கைக் கட்டமைப்போடு மிக இறுக்கமாகப் பின்னப்பட்டுள்ளனர். அவர்கள் இல்லாவிட்டால் நமது நாடு குறுகிக் குறைந்துவிடும்"என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதே நேரம் அவரது உத்தியோகபூர்வ பணிமனையில் கொரோனா காலங்களில் - விதிகளை மீறி நடத்தப்பட்டவை எனக் கூறப்படுகின்ற மது விருந்துகள் அவரது அரசியல் வாழ்க்கையில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கின்றன.

நம்பர் 10, டவுணிங் வீதியில் அமைந்துள்ள பொறிஸ் ஜோன்சனின் அலுவலக பூங்காவில் கடந்த 2020 மே மாதம் நடத்தப்பட்ட மது விருந்து தொடர்பான விவகாரத்தில் அவரைப் பதவி விலகுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் விதிகளை மீறி அங்கு மேலும் இரண்டு விருந்துகள் நடைபெற்றுள்ளமை பற்றிய தகவல்கள் புதிதாக வெளியாகியிருக்கின்றன.

கடந்த ஆண்டு ஏப்ரலில் பொது முடக்கக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்றுள்ள அவ்விரு விருந்துகளிலும் பிரதமர் ஜோன்சன் கலந்துகொண்டாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 

ஆனால் அவற்றில் ஒன்று இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குக்கு முதல் நாள் இரவு தொடங்கி விடிய விடிய நடந்துள்ளது என்ற"பகீர்" தகவலை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

மகாராணி எலிஸபெத்தின் கணவர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நடைபெற்ற ஏப்ரல் 17 ஆம் திகதிக்கு முதல் நாள் இரவு நடந்த பிரதமரின் அலுவலக விருந்தில் சுமார் 30 பேர் மது அருந்தி விடியும் வரை களியாட்டங்களில் ஈடுபட்டனர் என்று 'ரெலிகிராப்' பத்திரிகை தெரிவித்துள்ளது. 

மறுநாள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இளவரசரின் இறுதி நிகழ்வில் விதிகளைப் பின் பற்றி மகாராணி எலிஸபெத் மாஸ்க் அணிந்தபடி ஓர் ஓரமாகப் போய்த் தன்னந்தனியாக அமர்ந்திருந்தார் என்பதை ஊடகங்கள் நினைவூட்டியுள்ளன. 

மே , 2020 மது விருந்துக்காக நேற்றைய தினம் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மன்னிப்புக் கோரியிருந்த நிலையில் ஏப்பிரலில் நடந்த அடுத்த விருந்துகளுக்காக அவரது அலுவலகம் இன்று மகாராணியிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறது."இது மிகவும் வருந்தத்தக்க விடயம்" என்று பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சம்பவங்கள் பிரதமர் ஜோன்சனின் அரசியல் வாழ்வைப் பெரும் போராட்டத்துக்குள் தள்ளிவிட்டிருக்கின்றன. அவரது பழமைவாதக் கட்சிக்குள் அவரை எதிர்ப்பவர்களும், எதிர்க் கட்சியாகிய தொழிற் கட்சியைச் சார்ந்தவர்களும் பதவி விலகுமாறு அவர் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர்.

"பார்ட்டிகேற்" (PartyGate) எனக் கூறப்படுகின்ற இந்த முறைகேடுகள் 57 வயதான ஜோன்சனின் அரசியல் வாழ்வில் நிச்சயமற்றதொரு நிலையை உருவாக்கிவிட்டிருக்கின்றன. அவருக்குப் பின்னால் அடுத்துப் பிரதமர் பதவிக்கு வரக்கூடிய செல்வாக்குமிகுந்த தலைவர்கள் எவரும் அவரது கட்சிக்குள் இல்லை. 

பிரிட்டிஷ் பிரதமராக 2019 இல் பொறுப்பேற்ற ஜோன்சன் தனது பதவியில் நீடிப்பாரா என்பது தற்போதைய நிலையில் மூத்த சிவில் சேவை அதிகாரியான சூ கிறே (Sue Gray) அம்மையாரின் கைகளிலேயே தங்கியுள்ளது. 

டவுணிங் வீதி அலுவலகத்தில் விதிகளை மீறி நடந்த விருந்துகள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கின்ற பொறுப்பு அவரிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 

இதற்கு முன்னர் பல ஊழல் விசாரணைகளில் அமைச்சர்கள் சிலரது தலைகள்உருண் டமைக்கு அம்மையாரது அறிக்கைகளே காரணமாகின என்பது கவனிக்கத்தக்கது.
Previous Post Next Post