பிரான்ஸில் நாளை பணிப்புறக்கணிப்பு! மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என ஆசிரியர்கள் கோரிக்கை!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
பிரான்ஸில் பாடசாலைகளில் அரசு நடைமுறைப்படுத்தி வருகின்ற கொரோனா சுகாதார விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர் சங்கங்கள் நாளை பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. நாட்டின் மிகப் பெரிய பெற்றோர்கள் சம்மேளனமும் அதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.

இதனால் நாடெங்கும் பாடசாலைகள், கல்லூரிகள் செயலிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவரை நாளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று ஆசிரியர்கள் தரப்பில் கோரப்பட்டிருக்கிறது. டெல்ரா, ஒமெக்ரோன் திரிபுகள் ஏற்படுத்திய மோசமான தொற்றலையை நாடு எதிர்கொண்டுள்ள சமயத்தில்-குறிப்பாகச் சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்குள்ளாகியிருக்கின்ற சூழ்நிலையில்-ஆசிரியர்களின் பணிப் புறக்கணிப்பு இடம்பெறுகிறது.

ஜனவரியில் பாடசாலைகள் தொடங்கியது முதல் கல்வி அமைச்சு பள்ளிகளில் பேணவேண்டிய சுகாதார விதிகளை மூன்று தடவைகள் மாற்றியுள்ளது. ஒமெக்ரோன் வைரஸ் மிக வேகமாகப் பாடசாலைகளில் தொற்றுவதால் தனிமைப்படுத்தல், வகுப்புகளை மூடுதல் பரிசோதிப்பு என்று பல்வேறு நெருக்கடிகளைப் பள்ளி நிர்வாகங்களும் பெற்றோரும் எதிர்கொண்டுள்ளனர்.

பதின்ம வயது மாணவர்கள் உட்பட பாடசாலைகளில் தொற்றுக்குள்ளானவர்களது தொகை கடந்த வாரம் 5 வீதமாகக் காணப்பட்டது. பாடசாலைகளைத் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு உயர் தரம் வாய்ந்த மாஸ்க்குகள் வழங்கப்படவேண்டும் என்றும் வகுப்பறைகளில் காற்றோட்டத்தை சீராக்கும் கருவிகள் (carbon-dioxide detectors) பொருத்தப்பட வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஒன்றில் பாடசாலைகளை மூடுங்கள் அல்லது நேர்த்தியான சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று தொழிற்சங்கங்கள் போர்க் கொடி தூக்கியிருப்பதால் கல்வி அமைச்சர் மீது அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

முந்திய தொற்றலைகளின் போது கடைப்பிடித்த விதிகளை ஒமெக்ரோன் வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு அப்படியே நடைமுறைப்படுத்த முடியாது. அது எதிர்பாராத விதமான பெரும் வேகத்தில் பரவுகின்றது. மாணவர்கள் வகுப்பில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் தொற்றுக்குள்ளாகின்ற நிலை காணப்படுகிறது என்றும் அரசு விளக்கமளித்துள்ளது.
Previous Post Next Post