பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கான கொரோனா பரிசோதனைகள் இரத்து செய்யப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜொன்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
முழுமையாக கோவிட் தடுப்பூசி செலுத்திய பயணிகளுக்கான பரிசோதனைகளே இவ்வாறு இரத்து செய்யப்படுவதாக பிரதமர் கூறியுள்ளார்.
பிரித்தானியா வணிகத்திற்காக மற்றும் பயணிகளுக்காக திறந்திருக்கும் நாடு என்பதை வெளியுலகத்திற்கு காட்ட, பயணக் கட்டுப்பாடுகளில் முக்கிய மாற்றம் செய்யப்படவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, பிரித்தானியா வரும் மக்கள் இரண்டு தடுப்பூசி போடப்பட்டிருந்தால் கொரோனா பரிசோதனைகள் எடுக்க வேண்டியதில்லை என பிரதமர் கூறியுள்ளார். ஆனால், இந்த மாற்றும் எப்போது அமுல்படுத்தப்படும் என்பது தொடர்பான திகதியை பிரதமர் கூறவில்லை. ஆனால் இது குறித்து மேலதிக விவரங்கள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாலும், நாங்கள் இப்போது ஒமிக்ரோன் அலை வழியாக நகர்கிறோம். தற்போதைய நிலையில் பிரித்தானியாவில் கொரோனா புள்ளிவிவரங்கள் சிறப்பாக வருவதை காண முடிகின்றது. இந்த விடயங்களை கருத்திற் கொண்டு நாங்கள் இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு அவதானம் செலுத்தியுள்ளோம்” என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு பிரித்தானியாவில் மிகப்பெரிய விமான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.