உக்ரைன் மீது ரஷ்யாவின் முதல் நாள் தாக்குதல்: 137 பேர் உயிரிழப்பு! 316 பேர் காயம்!!


உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் இன்று இரண்டாவது நாளாகத் தொடரும் நிலையில் முதல் நாள் ரஷ்யாவின் தாக்குதல்களில் பொதுமக்கள், உக்ரேனிய படையினர் உள்ளிட்ட 137 பேர் உயிரிழந்ததாகவும் 316 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

உள்ளூர் நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவா், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரை எதிர்கொள்ள உக்ரேனியர்களை அணிதிரளுமாறு அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, ரஷ்யப் படைகளின் உக்கிர தாக்குதல்களை அடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர்.

ரஷ்ய துருப்புக்களுடன் வியாழன் அன்று உக்ரேனியப் படைகள் போரிட்டு நாடு முழுவதும் உள்ள இராணுவ நிலைகளை பாதுகாத்ததாக கூறிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யப் படைகளை தொடர்ந்தும் உறுதியுடன் எதிர்கொள்வோம் என்று கூறினார்.

இதற்கிடையில் ரஷ்யா மீது கடுமையான தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைனுக்கு தொடர்ச்சியான ஆதரவு மற்றும் உதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

அத்துடன், 7,000 கூடுதல் துருப்புக்களை ஜேர்மனிக்கு அனுப்ப உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.
Previous Post Next Post