பிரான்ஸில் புதிய அறிமுகம்! பூரண மருத்துவ விவரங்களுடன் சகலருக்கும் தனி"டிஜிட்டல் பைல்"!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
பிரான்ஸில் சகலருக்கும் டிஜிட்டல் சுகாதாரத் தரவு சேமிப்பு வசதி ("Mon espace santé") அறிமுகமாகின்றது.
 
வாழ் நாள் முழுவதும் ஒருவர் தனது சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சை சம்பந்தமான சகல தரவுகளையும் ஆவணங்களையும் ஒரேயிடத்தில் சேமித்து வைத்துப் பாதுகாக்கவும் பயன்படுத்தவும் வசதியாகவே இந்த ஏற்பாட்டை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்துகிறது. பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் அது நடைமுறைக்கு வந்துள்ளது.
 
"Mon espace santé" எனப்படும் தனிநபர் இணைய சேமிப்புத் தளத்துக்கான கணக்கை ஒவ்வொருவரும் தாங்களாகவே https://www.monespacesante.fr/ என்ற சுகாதார அமைச்சின் இணையப் பக்கத்தில் உருவாக்கிக் கொள்ளமுடியும். அதற்கான கடவுச்சொல் (Un code provisoire) வளர்ந்தோர் சகலருக்கும் அனுப்பிவைக்கப்படும்.

மார்ச் மாத இறுதியில் இருந்து டிஜிட்டல் கணக்கை உருவாக்கிக்கொள்ளலாம். கடவுச் சொல்லையும் சமூக சுகாதாரக் காப்புறுதி அட்டையையும் (carte vital) பயன்படுத்தி எவருமே மிக இலகுவாக இதனைச் செய்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான கணக்கை உருவாக்குவதற்கான கடவுச் சொல் அவர்களது பெற்றோருக்கு அனுப்பிவைக்கப்படும். ஒருவரது இரத்தப் பரிசோதனை முதற்
கொண்டு மருத்துவமனை அனுமதிகள், எக்ஸ் -றே போன்ற உடற் கூற்று சோதனைப் படங்கள், சத்திர சிகிச்சை விவரங்கள் போன்ற சுகநல ஆவணங்கள் அனைத்தையும் இந்த டிஜிட்டல் கணக்கில் வாழ்நாள் முழுக்கப் பேண முடியும்.

பிரெஞ்சுப் பிரஜைகள் அனைவரும் முழுநம்பிக்கையுடனும் முழுப் பாதுகாப்புடனும் தங்கள் மருத்துவத் தகவல்களை Mon espace santé தளத்தில் களஞசியப்படுத்திப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் தெரிவித்திருக்கிறார்.
  • சுகாதாரக் காப்புறுதி மீளளிப்பு முறையில் மாற்றம்
இதேவேளை, பிரான்ஸில் mutuelles எனப்படுகின்ற தனியார் சுகாதாரக் காப்புறுதி
முறைமை விரைவில் இல்லாதொழிக்கப்படவுள்ளது. சமூக சுகாதாரக் காப்பீட்டு நிறுவனத்தினாலும் (la sécurité sociale), தனியார் மருத்துவக் காப்புறுதி நிறுவனங்களாலும் (les mutuelles privées) மருத்துவச் செலவுகள் மீளளிக்கப்படுகின்ற நடைமுறை தற்சமயம் உள்ளது.

இந்த இரண்டு தரப்பு நிர்வாக முறையை ஒன்றாக மாற்றி "Grande sécu"என்ற ஒரே பெயரிலான திட்டத்துக்குள் மறுசீரமைப்பதற்கான யோசனையை சுகாதாரக் காப்பீட்டின் எதிர்காலம் தொடர்பான உயர் கவுன்சில் (High Council on the future of health insurance Hcaam) ஆராய்ந்து வருகிறது.
Previous Post Next Post