பிரான்ஸ் அதிபர் தேர்தல்: மக்ரோனின் வாக்குவீதம் குறைகிறது! மெலன்சோனின் செல்வாக்கு உயர்வு!!

  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்
பிரான்ஸின் அதிபர் தேர்தலில் இம்முறை வாக்களிப்பு வீதம் மிக மோசமான வீழ்ச்சியைக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நிலையில் இளையோரை வாக்களிக்கத் தூண்டும் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் தீவிர கவனத்தைச் செலுத்தி வந்துள்ளனர்.

முதற்சுற்று வாக்களிப்புக்கான பிரசாரங்கள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடையும். "தவறாது சென்று வாக்களியுங்கள். மரி யாதையுடனும் மிக அன்பான வற்புறுத்தலுடனும் வாக்களிக்கச் செல்லுமாறு உங்களை வேண்டுகிறேன்" என்று தீவிர வலதுசாரியான மரின் லூ பென் தனது
இறுதிப் பரப்புரையில் தெரிவித்திருக்கிறார்.
 
வேட்பாளர்கள் தங்கள் இறுதிப் பரப்புரைக் கூட்டங்களை நடத்தி முடித்திருக்கின்றனர். வாக்களிப்புக்கு மூன்று தினங்கள் மட்டுமே இருக்கையில் நேற்று வெளியாகிய வாக்கு வீத எதிர்வு கூறல்களில் மக்ரோனின் நிலை சற்று வீழ்ச்சியையும் மரின் லூ பென், மற்றும் ஜோன் லூக் மெலன்சோன் இருவரது நிலைகள் பலமடைவதையும் காட்டியிருக்கின்றன.

மக்ரோன் - மரின் லூ பென் இடையே முதற் சுற்றிலேயே மிக நெருக்கமான போட்டி இருக்கும் என்று கருத்தெடுப்புகள் கூறுகின்றன. கடந்தவாரம் 28 வீதமாக இருந்த மக்ரோனுக்கான வாக்குகள் இந்த வாரம் 26 ஆகக் குறைந்துள்ள அதேநேரம், மரின் லூ பென்னுக்கு அது 20 வீதத்தில் இருந்து 22 வீதமாக உயர்ந்துள்ளது. இம்முறை இரண்டாவது சுற்றிலும் இருவருக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

மக்ரோனும் லூ பென்னும் முறையே 53-47 வீத வாக்குகளைப் பெறுவர் என்று தேர்தலுக்கு முந்திய பொதுக் கணிப்புக்களில் தெரிவிக்கப்படுகிறது. தீவிர இடது சாரி வேட்பாளரான ஜோன் லூக் மெலன்சோன்(Jean-Luc Mélenchon) தனது வாக்குப் பலத்தை தொடர்ந்து ஸ்திரப்படுத்தி வருகிறார். அவருக்கான வாக்கு வீதம்15இல் இருந்து 17 ஆக அதிகரித்திருக்கிறது.

சோசலிஸக் கட்சியில் இருந்து வெளியேறி நீண்ட காலம் தனியாகத் தீவிர இடதுசாரி அரசியலை முன்னெடுத்துவருகின்ற மூத்த தலைவரான மெலன்சோன், இம்முறை எப்படியாவது இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிவிட முழுப்பலத்தையும் பயன்படுத்திவருகிறார்.
 
முன்னாள் தொலைக்காட்சி வாதவியலாளர் எரிக் செமூர், வலெரி பெக்ரெஸ் ஆகியோர் முறையே 10,9 வீத வாக்குகளையே பெறுவர் என்று கடைசிக் நேரக் கணிப்புகள் காட்டுகின்றன.

முன்னாள் அதிபர் நிக்கலஸ் சார்க்கோசி, தனது தாய்க் கட்சியான ரிப்பப்ளிக்கனின் சார்பில் களத்தில் நிற்கின்ற பெண் வேட்பாளர் வலெரி பெக்ரெஸுக்குத் தனது ஆதரவை பகிரங்கமாக வெளியிடுவதைத் தவிர்த்து விட்டார். 

இரண்டாவது சுற்றின்போது மக்ரோனை ஆதரிக்குமாறு அவர் தனது ஆதரவாளர்களைக் கோருவார் என்று அவருக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மெக்கின்ஸி (McKinsey) விவகாரம் அதிபர் மக்ரோனுடைய அரசு அதன் நிர்வாக விடயங்களுக்காக மெக்கின்ஸி (McKinsey) எனப்படும் அமெரிக்கத் தனியார் நிறுவனத்திடம் இருந்து நிபுணத்துவ ஆலோசனை பெற்றுக் கொண்டது என்று கூறப்படும் விவகாரம் தொடர்பாக நிதி வழக்குரைஞர்கள் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பெருமளவு அரசு நிதி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகின்ற இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

தேர்தலுக்கு மத்தியில் நடத்தப்படுகின்ற இந்த விசாரணையை அதிபர் மக்ரோன் வரவேற்றிருக்கிறார்
Previous Post Next Post