அவசரத்துக்கு ஜெனரேட்டர்களை ஆயத்தப்படுத்துகிறது ஜேர்மனி!

  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்
ஜேர்மனிக்கு Nord Stream 1குழாய் ஊடாக வழங்கிவருகின்ற எரிவாயுவை மொஸ்கோ முற்றாகத் துண்டிக்கப் போகிறது என்ற எச்சரிக்கையை ஜேர்மனியின் மத்திய எரிசக்தி நெட்வேர்க் ஏஜென்சியின் தலைவர் Klaus Müller விடுத்திருக்கிறார். 

மேற்கின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக ரஷ்யா ஐரோப்பாவுக்கான அதன் எரிவாயு விநியோகத்தை ஏற்கனவே 60 வீதமாகக் குறைத்திருந்தது. தற்போது குழாய்களில் பராமரிப்பு வேலைகளைச் செய்யப்போவதாகக் கூறி எரிவாயுவை எதிர்வரும் வரும் நாட்களில் முற்றாகத் துண்டிக்கப் போகிறது என்ற தகவலை Klaus Müller ஜேர்மனிய செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். 

Nord Stream கடலடி எரிவாயுக் குழாய்கள் ஒவ்வொரு 25 ஆயிரம் மணித்தியால சேவைக்குப் பின்னரும் பராமரிப்புச் செய்யப்படவேண்டும். ஆனால் ரஷ்யா இந்த மாதம் மேற்கொள்ளவிருக்கின்ற குழாய்ப் பராமரிப்பு திட்டமிட்ட "அரசியல் நோக்கம் கொண்ட பராமரிப்பு" என்று ஜேர்மனிய அதிகாரிகள் நம்புகின் றனர். 

எனவே அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது நிச்சயமாகத் தெரியவரப்போவ தில்லை என்று சுட்டிக்காட்டப் படுகிறது. இம்மாதம் 11 ஆம் திகதி பராமரிப்புக்காக எரிவாயு முற்றாகத் துண்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அதனைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ஜேர்மனிய மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் நெருக்கடியான சமயத்தில் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு மின் வழங்குவதற்காகப் பாரிய மின் பிறப்பாக்கிகளைத் தயார் நிலையில் வைப்பது குறித்து ஜேர்மனிய அரச அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். அந்நாட்டு செய்தி ஊடகங்கள் இத்தகவலை நேற்று வெளியிட்டிருக்கின்றன.

திடீரென மின் மற்றும் எரிவாயுப் பற்றாக்குறை ஏற்படுமிடத்து நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புகள் உட்பட அத்தியாவசிய சேவைகளுக்கு எரிசக்தி வழங்குகின்ற மாற்றுத் திட்டங்கள் குறித்து பொருளாதார அமைச்சுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் எரிசக்தி நெரிக்கடி ஏற்பட்டால் வீடுகளுக்கான சுடு தண்ணீர் விநியோகத்தைச் சுழற்சி முறையில் குறைக்க நேரிடும் என்று ஜேர்மனியின் இரண்டாவது பெரிய நகரமாகிய ஹம்பேர்க் (Hamburg) நகரை உள்ளடக்கிய மாநில சுற்றுச் சூழல் அமைச்சர் எதிர்வு கூறியுள்ளார்.
Previous Post Next Post