மியன்மாரிலிருந்து கனடா நோக்கி ஆழ்கடலில் ஒரு "தற்கொலை"பயணம்! (படங்கள்)

வியட்நாம் அருகே ஆழ் கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் கப்பல் தொடர்பான மேலதிக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிய கப்பலில் மிக நெருக்கமாக அடைத்து ஏற்றப்பட்டிருந்த அகதிகள் அனைவரும் மியான்மாரில் இருந்து கனடா நோக்கிய ஆபத்தான நீண்ட கடற் பயணத்தை-பெரும் நிதிச் செலவில் மேற்கொள்ளவிருந்தனர் என்று கூறப்படுகிறது. தென் சீனக் கடல் வழியாகப் பசுபிக் கடலைக் கடக்கின்ற - மிகச் சவாலான - தற்கொலைக்குச் சமனான - துணிகரப் பயணம் அது என்று வியட்நாமின் செய்தி ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

"லேடி ஆர் 3" (LADY R3) என்னும் அந்த மீன்பிடிக் கப்பலில் (படம்) கதறிக் கொண்டிருந்த இலங்கையர்கள் 303 பேரையும் தாங்கள் பொறுப்பேற்றிருப்பதாக வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இவர்களில் 19 பெண்கள், 20 குழந்தைகளும் அடங்குவர்.

மியன்மார் (பர்மா) நாட்டுக் கொடியுடன் காணப்பட்ட அந்தக் கப்பல் கடந்த 6 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை தென் சீனக் கடலில் வியட்நாமின் தெற்கு கடலோர வுங் தோ முனையில் (Vung Tau Cape) இருந்து 258 கடல் மைல்கள் தொலைவில் சேதமடைந்த நிலையில் கடலில் சிக்குண்டது. கடும் காற்றும் கொந்தளிப்புமான கால நிலைக்கு மத்தியில் கப்பலின் இயந்திர அறைக்குள் நீர் புகுந்ததால் அது மூழ்கும் ஆபத்து நிலைக்குச் சென்றுகொண்டிருந்தது. அதனால் அதிலிருந்தோர் அவலக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

கப்பல் மூழ்குவது பற்றிய முதலாவது தகவல் இலங்கைக் கடற்படையிடமிருந்து வியட்நாம் கரையோரக் காவல் மற்றும் மீட்புப் படையினருக்கு (Maritime Search and Rescue Coordination Force) மறுநாள் திங்கட்கிழமை காலை கிடைத்தது. அவர்கள் தலைநகர் ஹோ சி மினில் (Ho Chi Minh) உள்ள கரையோர வானொலித் தொடர்பு நிலையத்துக்கு அந்த அவசர தகவலைத் தெரிவித்தனர். அந்த சமயத்தில் அதே கடற்பரப்பில் சென்றுகொண்டிருந்த ஏனைய கப்பல்களுக்கு அவசர மீட்பு உதவி பற்றிய செய்திகள் பறந்தன. சிங்கப்பூரில் இருந்து அதேகடல் வழியாகச் சென்றுகொண்டிருந்த ஜப்பான் நாட்டின்'ஹெலியோஸ் லீடர்' (Helios Leader) என்ற சரக்குக் கப்பல் உடனடியாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பலை நோக்கித் திருப்பப்பட்டது. சுமார் 40 நிமிட நேரத்தில் அகதிகள் கப்பலை நெருங்கிய ஜப்பானியக் கப்பல் அதிலிருந்த 303 பேரையும் மீட்டது. இந்த மீட்பு முயற்சிக்கு வியட்நாமின் கடற்படைப் படகுகள் உதவின.

பெரும் பய பீதியால் மயக்கமுற்றும் நோய்வாய்ப்பட்டும் நெரிசலில் காயமடைந்தும் காணப்பட்ட பல அகதிகளுக்குக் கப்பலில் வைத்து முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் வியட்நாமின் வுங் தோ (Vung Tau) துறைமுகத்துக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படவிருந்தனர். அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வுங் தோ மாகாண அதிகாரிகளிடம் கைகயிக்கப்படுவர் என்ற தகவலை வியட்நாமின் செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்தது.

அகதிகள் மீட்பு முயற்சிகளுக்கு சிங்கப்பூர் கரையோரக் காவல் படையினரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கப்பல் கடலில் தத்தளிப்பது பற்றிய முதல் தகவலை சிங்கப்பூரே வழங்கியதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, அகதிகள் அனைவரையும் நாட்டுக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளைக் கொழும்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

வியட்நாம் ராஜதந்திரிகளுடன் தொடர்பு கொண்டு அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்திருக்கிறார். முதலில் அவர்கள் அனைவரும் குடியேறிகள் தொடர்பான சர்வதேச நிறுவனம் ஒன்றிடமே (International Organization for Migration) கையளிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகே அவர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்படுவர் என்று வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

கப்பல் மாலுமிகள் மற்றும் பயண ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகே இந்த ஆபத்தான கடற்பயணம் தொடர்பான பின்னணித் தகவல்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Previous Post Next Post