யாழில் 53 வயதான வெளிநாட்டு மாப்பிள்ளையைத் திருமணம் செய்ய 15 வயது மகளை வற்புறுத்திய பெற்றோர்!

நெதர்லாந்திலுள்ள 53 வயது நபரொருவரைத் திருமணம் செய்யுமாறு பெற்றோர் வற்புறுத்தினர் என 15 வயதுச் சிறுமியொருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுமியை தாக்கிய குற்றச்சாட்டில் அவரது பெற்றோரை அச்சுவேலி பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 15 வயதுச் சிறுமியை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தியதாக பிரான்ஸிலிருந்து வந்த கல்வியங்காட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞன் கடந்த மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந் நிலையில் சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது.

இதேவேளை- சிறுமியிடம், சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தினர், பொலிஸார் உட்பட பல தரப்பினரும் வாக்குமூலம் பெற்றுள்ளனர். நெதர்லாந்திலுள்ள 53 வயதான ஒருவருக்கு தன்னை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயல்கின்றனர் என இதன்போது சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

அவருடன் 'வீடியோ' அழைப்பு மூலம் உரையாட நிர்ப்பந்திப்பதாகவும் தனது வாக்குமூலத்தில் சிறுமி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தன்னை நிர்வாணமாக அவருடன் 'வீடியோ' அழைப்பில் பேசுவதற்கு பெற்றோர் அழுத்தம் கொடுத்தனர் எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். சிறுமி பேர்த்தியாரின் பராமரிப்பில் தற்காலிக மாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியை தாக்கிய குற்றச்சாட்டில் அவரது பெற்றோரை நேற்றுக் கைது செய்துள்ளதாக அச்சுவேலிப்பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
Previous Post Next Post