சீனாவில் முடங்கியது ஐ-போன் தொழிற்சாலை! வேலி பாய்ந்து ஓடும் ஊழியர்கள்!! (வீடியோ)

"வைரஸ் இல்லாத சீனா" என்ற கொள்கையில் (zero-Covid policy) விடாப்பிடியாக இருக்கிறது பீஜிங் நிர்வாகம். எங்காவது ஒரு தொற்றுக் கண்டறியப்பட்டால் அந்த இடத்தை ஆட்களோடு சேர்த்து இறுக்கி மூடிவிடும் கடுமையான கொள்கை அது. அதனால் வைரஸுக்கு அஞ்சி ஓடிக் கொண்டிருந்த சீனர்கள் இப்போது திடீர் முடக்கங்களில் இருந்து தப்புவதற்காக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். உலகில் கோவிட் வைரஸ் அச்சமும் அது தொடர்பான கட்டுப்பாடுகளும் அகன்று நீண்ட நாள்கள் ஆகின்ற போதிலும் சீனாவில் நிலைமை இன்னமும் மாறிவிடவில்லை.

உலகின் மிகப் பெரிய ஐ-ஃபோன் பொருத்தும் தொழிற்சாலை சீனாவின் மத்திய நகரமான Zhengzhou வில் அமைந்துள்ளது. தைவானின் ஃபொக்ஸ்கோன்(Foxconn) தொழில் நுட்பக் குழுமத்துக்குச் சொந்தமான அந்தத் தொழிற்சாலையில் சில வைரஸ் தொற்றுக்கள் காணப்பட்டதை அடுத்து விதிகளின் கீழ் திடீரென அது மூடி முடக்கப்பட்டிருக்கிறது. முடக்கத்துக்குள் சிக்காமல் அங்கிருந்து வீடுகளுக்குத் தப்பிச் செல்வதற்காக ஊழியர்கள் தொழிற்சாலையை விட்டு ஓடும் வீடியோக் காட்சிகள் பல
சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. பலர் சுவர் ஏறிக் குதித்து கால்நடையாக ஓடுகின்ற காட்சிகளும் வெளியாகியுள்ளன. சர்ச்சைக்குரிய சுகாதார முடக்கத்துக்குள் சிக்காமல் தப்பிவிட ஊழியர்கள் முயன்றதால்

தொழிற்சாலை நிர்வாகம் அவர்கள் சிரமமின்றி வெளியேறிச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. முடக்கத்துக்குள் இருந்து பணியாற்ற விரும்புவோருக்கு விசேட போனஸ் கொடுப்பனவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அப்பிள் (Apple) நிறுவனத்துக்கு ஐஃபோன்களைப் (iPhones) பொருத்தி வழங்குகின்ற உலகின் மிகப் தொழிற்சாலை மூடப்பட்டிருப்பது புத்தாண்டில் ஐ-ஃபோன் விற்பனையைப் பெரிதும் பாதிக்கவுள்ளது.

இதேவேளை ஷாங்காய் நகரில் உள்ள வேர்ள்ட் டிஷ்னி (Shanghai Disney) கேளிக்கைப் பூங்கா அங்கு ஒரேயொரு தொற்றுக் கண்டறியப்பட்டதை அடுத்து ஆயிரக் கணக்கான உல்லாசப் பயணிகளுடன் இழுத்து மூடப்பட்டிருக்கிறது. தொற்றுப் பரிசோதனைக்குப் பிறகே எவரும் வெளியே வரலாம் என்ற கண்டிப்பான கட்டுப்பாடு போடப்பட்டிருக்கிறது. 
Previous Post Next Post