யாழில் “கரப்பான் பூச்சி” வடை விற்பனை செய்த உணவகத்திற்குச் சீல்! (படங்கள்)

கடந்த ஞாயிற்றுகிழமை 04.12.2022 யாழ்ப்பாணம் வண்ணை சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் ஒருவர் வாங்கிய வடையில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்ட நபர், இது தொடர்பில் யாழ் நகர பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் இற்கு முறைப்பாடு செய்தார்.

உடனே குறித்த உணவகத்திற்கு சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள் கடையினை பரிசோதனை செய்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு முடிவு செய்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்றையதினமும் 05.12.2022ம் திகதி மாநகர சுகாதார வைத்திய அதிகாரியுடன் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த கடையினை பரிசோதனை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது பல சுகாதார குறைபாடுகள் இனங்காணப்பட்டது. அத்துடன் குறித்த கடையிற்கு வடை தயாரித்து வழங்கும் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள சமையற்கூடமும் பரிசோதனை செய்யப்பட்டது.

குறித்த சமையற்கூடமும் சுகாதார சீர் கேட்டுடன் இயங்குவது பொது சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இன்றையதினம் 06.12.2022ம் திகதி யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ் நகர பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் இனால் கடை உரிமையாளரிற்கு எதிராகவும், சமையற்கூட உரிமையாளரிற்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இரு வழக்குகளையும் விசாரித்த நீதவான் குறித்த கடையினையும், சமையற்கூடத்தினையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக உடன் சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டதுடன், இரு சந்தேக நபர்களையும் தலா ஒரு இலட்சம் ஆட் பிணையில் செல்ல அனுமதித்தார்.

வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 25ம் திகதிக்கு நீதிமன்றால் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த கடையும், சமையற்கூடமும் சீல் வைத்து மூடப்பட்டது.

Previous Post Next Post