பிரான்ஸ் பேரணிகளில் சனத் திரள்! வலுக்கிறது எதிர்ப்பு !! பெப்.7,11 ஆம் திகதிகளில் மக்கள் மீண்டும் வீதிக்கு!!!

தொழிற்சங்கங்கள் தலைமையிலான தொழிலாளர் போராட்டங்களால் பிரான்ஸ் நேற்று  இரண்டாவது தடவையாக ஸ்தம்பிதமடைந்தது.

ஓய்வுபெறும் வயது எல்லையை 62 இல் இருந்து 64 ஆக உயர்த்துவது அடங்கிய சீர்திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் வேலை நிறுத்தங்களும் வீதிப் பேரணிகளும் நடைபெற்றிருக்கின்றன. தலைநகர் பாரிஸ் உட்பட முக்கிய நகரங்களில் நடந்த நேற்றைய இரண்டாவது நாள் பேரணிகளில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற முதலாவது எதிர்ப்பு நடவடிக்கையை விடவும் அதிக எண்ணிக்கையான சனத் திரள்கள் காணப்பட்டன என்று அறிவிக்கப்படுகிறது.

முக்கியமான எட்டுத் தொழிற்சங்கங்களால் அழைப்பு விடுக்கப்பட்ட இன்றைய வீதிப் பேரணிகளில் நாடெங்கும் 28 லட்சம் பேர் (2.8 million) கலந்து கொண்டனர் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு(CGT) அறிவித்துள்ளது.

பொலீஸாரின் மதிப்பீடுகளின்படி நாடெங்கும் 12 லட்சத்து 72 ஆயிரம் பேர் (1.272 million) மட்டுமே பங்குபற்றினர் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 19 ஆம் திகதி நடந்த முதல் நாள் பேரணிகளில் கலந்து கொண்டவர்களது எண்ணிக்கை உள்துறை அமைச்சின் தகவலின்படி 11 லட்சங்கள் ஆகும்.

பாரிஸ் நகரில் நடந்த மக்கள் பேரணியில் ஐந்து லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்று தொழிற்சங்கங்கள் மதிப்பிட்டுள்ளன. ஆனால் பாரிஸ் பொலீஸ் தலைமையகம் ஆர்ப்பாட்டக்காரர்களது எண்ணிக்கை 87 ஆயிரம் என்று அறிவித்துள்ளது.

பாடசாலைகள், பொதுப் போக்குவரத்து, எரிபொருள் விநியோக மையங்கள் உட்பட பல்வேறு தொழிற்றுறையினரும் நேற்றைய வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

அடுத்த கட்ட வேலை நிறுத்தம் மற்றும் வீதிப் பேரணிகளை எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் 11 ஆம் திகதி சனிக்கிழமையும் இரு தினங்கள் நடத்துவது என்று எட்டுத் தொழிற்சங்கங்களும் நேற்று மாலை கூடி முடிவு செய்துள்ளன.

பாடசாலைகளின் குளிர்கால விடுமுறை தொடங்க இருக்கும் நிலையில் போராட்டங்களை அக்காலப் பகுதியிலும் தொடர்ந்து நடத்துவதற்குத் தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.

மக்ரோன் அரசு அதன் ஓய்வூதியச் சீர்திருத்தச் சட்ட நகலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில் அதற்கு எதிரான தொழிலாளர் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் தொழிலாளர்களது ஆதரவைத் தொடர்ந்து தக்கவைப்பதன் மூலம் மட்டுமே அரசை மண்டியிடச் செய்ய முடியும் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

இன்றைய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் பிரதமர் எலிசபெத் போர்ன் வெளியிட்டிருக்கின்ற ருவீற்றர் பதிவு ஒன்றில் "ஓய்வூதியச் சீர்திருத்தம் கேள்விகளையும் சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது" என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

ஐரோப்பாவின் முக்கிய பெரிய பொருளாதார சக்திகளான நாடுகளில் பிரான்ஸில் மட்டுமே ஓய்வூதிய வயது எல்லை ஆகக் குறைந்த அளவில் 62 வயதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post