பாரிஸ் பூங்காவில் பல துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடற் பாகம் மீட்பு!

பாரிஸ் நகரின் பிரபல புட் சுமோ பூங்காவில் (parc des Buttes-Chaumont) பெண் ஒருவரது உடற் பாகம் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. மரத் தோப்புப் பகுதி ஒன்றில் குப்பைப் பை ஒன்றினுள் கிடந்த அந்த உடற்பாகத்தைப் புல்லுத் தரையைப் பராமரிக்கின்ற பூங்காப் பணியாளர்களே முதலில் கண்டனர் என்று அறிவிக்கப்படுகிறது.

பெண் ஒருவரது இடுப்புப் பகுதியே குப்பை சேகரிக்கும் பை ஒன்றினுள் இன்று நண்பகல் வேளை கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாகக் குற்றவியல் பொலீஸ் வட்டாரங்களை ஆதாரம் காட்டிப் பாரிஸ் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தை அடுத்துப் பாரிஸ் நகரில் 19 ஆவது நிர்வாகப் பிரிவில் (XIXe arrondissement) அமைந்துள்ள அந்தப் பூங்கா உடனடியாக மூடப்பட்டிருப்பதாக அந்த நிர்வாகப் பிரிவின் முதல்வர் பிரான்ஷூவா டானியோ (François Dagnaud) தெரிவித்திருக்கிறார். பாரிஸ் நீதித்துறைப் பொலீஸ் பிரிவின் குற்றவியல் பகுதியினர் பூங்காவை மூடி அங்கு சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
Previous Post Next Post