வாகன இறக்குமதித் தடை நீடிக்கும்! 100-150 பொருள்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கத் தீர்மானம்!!

அடுத்த நான்கு மாதங்களில் 100 முதல் 150 பொருள்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசு நீக்கும், இந்த நடவடிக்கை மாற்று விகிதங்கள், அந்நிய கையிருப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று திறைசேரியின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த செய்தியை கொழும்பு ஆங்கில வாரேடான சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ளது.

வாகனங்கள் ஆண்டுக்கு குறைந்தது இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இறக்குமதி செய்வதால், இது வெளிநாட்டு கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வாகன இறக்குமதி கட்டுப்பாடு தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கணினிகள், அலைபேசிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், எழுதுபொருட்கள், உணவுப் பொருட்கள், ஆடைப் பொருட்கள் மற்றும் ஆடைகள், தோல் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உதிரி பாகங்கள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள், விவசாய உபகரணங்கள், குளியலறை பொருத்துதல்கள் மற்றும் பீங்கான் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் டைல்ஸ் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் பொருட்களில் அடங்கும்.

மத்திய வங்கி, கைத்தொழில் அமைச்சு மற்றும் திறைசேரி என்பன கட்டுப்பாடுகள் நீக்கப்படும் பொருட்களின் அளவை தீர்மானிக்கும் என்று திறைசேரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருள்களுக்கு கறுப்புச் சந்தை இல்லை என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

“இருப்பினும், வசதி சுரண்டப்படாமல் இருப்பதையும், இறக்குமதிகள் தேவையான அளவை விட அதிகமாக இல்லை என்பதையும் உறுதிசெய்ய கடுமையான கண்காணிப்பு பொறிமுறை இருக்கும். தேவை ஏற்பட்டால், கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம்”என்றும் அவர் மேலும் கூறினார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்த வாரம் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் வாகனங்கள் உட்பட சுமார் ஆயிரத்து 500 பொருட்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாகன இறக்குமதி தடை அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஏனைய கடன் வழங்கும் முகவர் நிறுவனங்கள் மற்றும் நன்கொடை நாடுகளிடமிருந்து இலங்கை மேலும் கடன்களை எதிர்பார்க்கிறது.

எதிர்பார்க்கப்படும் நிதிகளில் ஜூலை மாதத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 330 மில்லியன் அமெரிக்க டொலர்களும், டிசம்பரில் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்களும் எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நலத் திட்டங்களுக்காக சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் உலக வங்கியின் கடன் வசதிக்கான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JAICA), சீனா எக்சிம் வங்கி மற்றும் உலக வங்கி திட்டங்களின் கடன்கள் செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post Next Post