பிரான்ஸில் சிறப்புத் தள்ளுபடியில் சில பொருள்களை விற்பதற்குத் தடை!

"ஒன்று எடுத்தால் இரண்டு இலவசம்" என்று கூறி சில பொருள்களைத் தேவைக்கு அதிகமாக நுகர்வோரது தலையில் கட்டிவிடும் வியாபாரத் தந்திரங்களுக்குக் கட்டுப்பாடு வருகிறது.

பெரிய பல்பொருள் அங்காடிகளில் "சுப்பர் புரோமோசன் (super promotions) 70%”, “1+1 = 3 உருப்படிகள்" என்று குறிப்பிட்டு சலவை இயத்திரச் சவர்க்காரங்கள் முதல் பற்பசைகள், சம்பூக்கள் வரை பல்வேறு பொருள்கள் அமோகமாக விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்களை வியப்பில் அதிர்ச்சியடையச் செய்து தங்கள் வருமானத்தையும் தேவையையும் மீறிய நுகர்வுக்குத் தூண்டும் விதமான இந்தச் சலுகை வியாபாரத் தந்திர முறையைக் குறைக்கின்ற சட்டமூலம் ஒன்று பிரான்ஸின் சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இனிமேல் கடைகளில் சுகாதாரம் - அழகு, வாசனைத் திரவியங்கள், சுத்திகரிப்பு - பராமரிப்புச் சார்ந்த பொருள்களை (tous les produits de l’hygiène-beauté, de parfumerie et d’entretien) அள்ளுகொள்ளாக விற்பனை செய்வது 34% வீதமாகக் குறைக்கப்படுகிறது.

சவர்க்காரம், பற்பசை, கழிப்பறைக் கடதாசி, முகப்பூச்சுகள், சம்பூ, ,சலவை இயந்திரத்துக்கான திரவ சவர்க்காரம் போன்ற சில பொருள்களது பாவனை அபரிமிதமாக அதிகரித்தமைக்கு வணிக நிறுவனங்களது இத்தகைய வியாபார உத்திகள் மூலமான நுகர்வுத் தூண்டுதலே காரணம் என்று சொல்லப் படுகிறது. இவைபோன்ற கவர்ச்சிகரமான விற்பனை உத்திகள் தங்களுக்கு மிக அவசியமான உணவுப் பொருள்களில் இருந்து நுகர்வோரது கவனத்தைத் திசை திருப்புகின்றன.

தேவைக்கு அதிகமாகப் பொருள்களை முண்டியடித்து வாங்கத் தூண்டி அவர்களை நிதி நெருக்கடியில் தள்ளுகின்றன. அதேசமயம் பொருள்களின் பெறுமானத்தையும் குறைத்துவிடுகின்றன - என்று நுகர்வோர் நலன் சார்ந்த துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

மிகப் பெரிய பல்பொருள் அங்காடி வலையமைப்புகள் இந்தப் புதிய சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. பண வீக்கம் அதிகரித்துவரும் நிலையில் இந்தச் சட்டம் நுகர்வோரையும் பாதிக்கும் என்று கருத்துக்கள் எழுந்தன. எனினும் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியிருக்கிறது. ஆயினும் புதிய சட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே நடைமுறைக்கு வரும்.
Previous Post Next Post