டெங்கு நோய்க்கு அருமருந்தாகும் அல்லை விவசாயியின் அற்புத பானம்!! (வீடியோ)

நமது பிரதேசங்களில் அழிவடைந்து செல்லும் இயற்கை முறையிலான விவசாயத்தை அல்லைப்பிட்டியைச் சேர்ந்த இளம் விவசாயி தூக்கி நிறுத்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்தவகையில் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த இயற்கை விவசாய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார் மகேஸ்வரன் கிரிசன்.

இளம் விவசாயியான இவர் தான் சார்ந்த சூழல் குறித்து மிகவும் கரிசனை நிரம்பியவராக இங்குள்ள ஏனைய இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றார்.

இரண்டு வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியில் அல்லை விவசாயி இயற்கை விவசாய விற்பனை நிலையம் என்கிற பெயரில் சிறிய இயற்கை அங்காடியை ஆரம்பித்திருந்தார்.

அந்நிலையத்தை இலக்கம் 384இ கஸ்தூரியார் வீதி (கஸ்தூரியார் வீதியும் நாவலர் வீதியும் சந்திக்கும் சந்தியில் இருந்து 50 அ தூரத்தில்) என்கிற முகவரிக்கு தற்போது மாற்றியுள்ளார்.

அங்கு இயற்கையில் விளைந்த நஞ்சில்லாத மரக்கறிகள், உள்ளூர் உற்பத்திப் பொருள்கள் போன்றவற்றை விற்பனை செய்வதோடு, இலைக்கஞ்சி, மூலிகைத்தேநீரையும் விற்பனை செய்யும் ஆரோக்கியமான உணவகமாகவும் மாற்றியுள்ளார்.

தற்போது யாழ் கஸ்தூரியார் வீதியில் உள்ள அல்லை விவசாயியின் ஆரோக்கிய உணவகத்தில் நிறைபோசனையான ஆரோக்கிய உணவான இலைக்கஞ்சியை பெற்றுக் கொள்ள முடியும்.

இலைக்கஞ்சிக்கு தேவையான மொட்டைக்கறுப்பன் அரிசியையும் கிரிசன் அல்லைப்பிட்டியில் உள்ள தனது வயலில் இயற்கையாகவே உற்பத்தி செய்கிறார்.

வல்லாரை, பொன்னாங்காணி, கங்குன், தூதுவளை, அகத்தி, பசளி, முசுட்டை, முடக்கொத்தான், முருங்கை இலை என எமது சூழலிலும் வேலிகளிலும் கிடைக்கும் மூலிகை சார்ந்த இலைகளையும் பயன்படுத்தி இலைக்கஞ்சியை தயாரித்து வருகிறார்.

மொட்டைக் கறுப்பன் அரிசி, பத்துக்கும் மேற்பட்ட இலைவகைகள், தேங்காய்ப்பால், பயறும் சேர்க்கப்பட்டு மண்சட்டியில் இலைக்கஞ்சி தயாரிக்கப்படுகின்றமை இன்னும் சிறப்பானது.

சிறியவர் முதல் பெரியோர் வரை இதனை அருந்தலாம். குறிப்பாக கர்ப்பிணித் தாய்மாருக்கு இது மிகச் சிறந்த உணவாகும். ஏனெனில் குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு தேவையான இரும்பு, கல்சியம் போன்ற பல போசனைப் பொருள்கள் இந்த இலைக்கஞ்சியில் உள்ளன.

தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மிகச் சிறந்த உணவுகளில் ஒன்று இந்த இலைக்கஞ்சி என மருத்துவர்களே பரிந்துரைத்துள்ளனர்.

இலைக்கஞ்சி தொடர்பிலான விழிப்புணர்வு சமூகத்தில் அதிகரித்து வருவதால் யாழ்நகரத்தில் இருந்து மட்டுமல்லஇ தூர இடங்களில் இருந்தும் வந்தும் இலைக்கஞ்சியை வாங்கிச் செல்கின்றனர்.

துரித உணவுக்கலாச்சாரம் எமது இளையோர்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் இன்றைய நிலையில் ஆரோக்கிய இலைக்கஞ்சியையும் அதன் மகத்துவத்தையும் இளையோரிடையே பரப்பி வரும் கிரிசனின் தற்சார்பு முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அல்லை இளம் விவசாயியான கிரிசனின் தளராத இயற்கை வாழ்வியலை நோக்கியதான முயற்சிகள் குறித்து அவரது இயற்கை விவசாய நண்பர்கள், பெற்றோர் கூறுவதைக் கேளுங்கள்.
Previous Post Next Post