கொரோனா வைரஸ் தாக்கம்! ஒரே நாளில் 13 பேர் பலி!! படுமோசமான நிலையில் சீனா!!!

உயிர்கொல்லி வைரஸ் கொரோனாவின் தாக்கம் சீனாவை உருக்கி வருகின்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான தகவலின்படி குறைந்தது 56 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 13 பேர் பலியாகியுள்ளதாக சீனாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதேவேளை 130 நோயாளிகள் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் சீன சுகாதாரத்துறைத் அதிகாரிகள் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று மட்டும் 323 பேர் பாதிப்புக்களுடன் புதிதாக அடையாளம் காணப்பட்டதாக சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1975-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்டது.

காய்ச்சலுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர். பின்னர் இந்த வைரஸ் நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களுக்கும் பரவியது.

இதேவேளை இந்த உயிர்கொல்லி வைரஸ் பரவுவதால் தனது நாடு கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

அரச உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் அவர் இதனை கூறினார். இதற்கிடையில் புதிய கொரோனா வைரஸால் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

1900 க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் வுஹானில் இருந்து தனியார் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொது போக்குவரத்து மட்டுமே தடை செய்யப்பட்டது.

வைரஸ் நிலவும் சூழ்நிலையில் சீனாவில் சுமார் 18 நகரங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. சுமார் 56 மில்லியன் மக்கள் அவற்றில் சிக்கியுள்ளனர்.

இதற்கிடையில் வுஹான் மற்றும் ஹூபேயில் சிக்கியுள்ள பொதுமக்களை விடுவிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென சீன அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுக்கள் வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரிட்டன் தனது குடிமக்களை வுஹானிலிருந்து வெளியேற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்துள்ளது.
Previous Post Next Post