மருத்துவ மாணவி பலாத்காரத்தின் பின் கொலை! நால்வருக்கு மார்ச் 3இல் தூக்கு!!

இந்தியாவில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா கொலை குற்றவாளிகளான முகேஷ் சிங்(32), பவன் குப்தா(25), வினய் சர்மா(26), அக்ஷய் குமார்(31) ஆகிய நால்வருக்கும் எதிராக கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தர்மேந்திர ராணா, இந்த உத்தரவை நேற்று பிறப்பித்தார்.

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு டில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு குற்றவாளிகள் ஒவ்வொருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு, சீராய்வு மனு, குடியரசுத் தலைவரிடம் கருணை மனு என தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்து, தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை தாமதப்படுத்தி வந்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் புதிய திகதியை அறிவிக்கக் கோரி டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் டில்லி அரசு சார்பிலும் நிர்பயாவின் பெற்றோர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னதாக குற்றவாளிகள் நால்வருக்கும் ஜனவரி 22-ஆம் திகதி தூக்குத் தண்டனையை நிறைவேற்றுமாறு டில்லி நீதிமன்றம் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

பின்னர் பிப்ரவரி 1-ஆம் திகதிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஒத்திவைக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் இந்த முறை தூக்கிலிடப்படுவார்கள் என்று நம்புவதாக நிர்பயாவின் பெற்றோர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

டில்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சாலையோரம் வீசப்பட்டார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த போதிலும்இ சிகிச்சைப் பலனின்றி 2012 டிசம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார்.  இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டிருந்த நிலையில் மற்றொருவர் சிறார் என்பதால் 3 ஆண்டுகள் கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டு விடுதலையாகியிருந்தார்.

மற்ற குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, அக்ஷய் குமார், பவன் குப்தா ஆகிய நால்வருக்கும் டில்லி விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அந்த தண்டனையை டில்லி உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதிசெய்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post