“அடிக்கிற அடியில கன்னம் பழுக்கும்” புதுமுக மாணவர்களை மிரட்டிய அடுத்த வீடியோ!

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதைகள் தொடர்பில் இணையங்கள் ஊடாகவும் சமூகவலைத்தளங்கள் ஊடாகவும் காணொளி மற்றம் புகைப்படங்களுடன் செய்திகள் வெளிவந்திருந்தன.

இந் நிலையில் இன்னுமொரு காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. புதுமுக மாணவர்களை அச்சுறுத்திய சிரேஸ்ட மாணவர் ஒருவரின் புகைப்படத்துடனான ஓடியோ வெளியாகியுள்ளது.

கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கற்கும் மாணவர்கள் புதுமுக மாணவர்களை வட்சப் குறுாப்பில் சேர்த்து அவர்களுக்கு கொடுத்த ராக்கிங் தொடர்பாக செய்திகள் வெளியாகியிருந்தன.  அதில் உச்சகட்டமாக ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இடம்பெற்றிருந்தது.

குறித்த வட்சப்குறுாப்பில் சிரேஸ்ட மாணவர்களாக இருந்தவர்களில் சிலரால் புதுமுக மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டிருந்தனர். அவ்வாறு அச்சுறுத்தல் மேற்கொண்டவர்களில் ஒருவரை பாதிக்கப்பட்ட மாணவிகள் அடையாளப்படுத்தி அவரது புகைப்படம் மற்றும் ஒலிப்பதிவுடன் எமக்கு அனுப்பியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்றும் யாழ் பல்கலைக்கழகத்தில் இவ்வாறு நுாற்றுக்கும் குறைவான சில மனம் கொண்ட மாணவர்கள் இருப்பதும் அவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி எவ்வாறன செயற்பாட்டை மேற்கொள்ளப் போகின்றார்கள் என்பதையும் எண்ணும் போது மிகவும் வேதனையாக உள்ளது.

இவ்வாறான ஒரு சில மாணவர்களால் ஒட்டுமொத்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தற்துணிவை ஏற்படுத்தவும் கூச்ச சுபாவத்தை போக்குவதற்கும் சிரேஸ்ட மாணவர்களுடன் சகஜமாக பழக அவர்களிடம் இருந்து கற்றல் நடவடிக்கைகளுக்கான உதவிகளைப் பெறுவதற்கும் புதுமுகமாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பகிடிவதை என்ற பெயரிலான ‘ராக்கி‘ தற்போது தடம்மாறி பல மாணவர்களை பல்கலைக்கழகத்திலிருந்து துரத்துவதற்கும் பல்கலைக்கழகத்திற்கே நுழைவதற்கு பயப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. ஆகவே இவ்வாறான தரக்குறைவான பாலியல் ரீதியிலான சித்திரவதைகளுடன் கூடிய பகிடிவதை முற்றாக அழித்தொழிக்கப்பட வேண்டும்.  இதற்காக சகலதரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும்.

கிளிநொச்சி பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை வட்சப்பில் அச்சுறுத்தியவரின் புகைப்படம் என புதுமுகமாணவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அவரது ஒலிப்பதிவையும் நாம் இங்கு வெளியிட்டுள்ளது ஏனெனில் இவ்வாறனவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களை சமூகத்தில் நற்பிரஜையாக உருவாக்க சம்மந்தப்பட்ட தரப்புக்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காகவே.

குறித்த மாணவன்தான் அவ்வாறு அச்சுறுத்தினாரா என்பதை தீர விசாரித்து அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.

மேலும் குறித்த புதுமுக மாணவிகளில் பலரின் பெற்றோரும் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர்களே. தமக்கு ராக்கிங் என்றால் என்ன என்று தெரியும் என்றும் ஆனால் இவ்வாறு மிகக் கேவலமான ராக்கிங் தற்போதுள்ள மாணவர்களால் மேற்கொள்ளப்படுவதை எண்ணும் போது பல்கலைக்கழகத்திற்கு தங்களது பிள்ளைகளை எதற்காக அனுப்புவேண்டும் என தோன்றுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Previous Post Next Post