மாணவியின் கையைப் பிடித்த ஆசிரியர் கைது! அதிபர் மீதும் தாக்குதல்!!

கிளிநொச்சி பாரதிபுரம் மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவியின் கையை, அதே பாடசாலையில் கல்வி கற்கும் ஆசிரியர் ஒருவர் பிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பிரதேசவாசிகள் திரண்டு குறிப்பிட்ட ஆசிரியர் மற்றும் அதிபர் மீது கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியிருந்தனர். அத்துடன் இது தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டதையடுத்து அன்றைய தினமே ஆசிரியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இச் சம்பவத்தை ஆராய்ந்த கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

சம்பவம் நடந்தது பாடசாலை முடியும் நேரத்தில். அதாவது 8 ஆம் பாட வேளையில். பரபரப்பான அந்த சமயத்தில் வகுப்றைக்குள் அனைத்து மாணவர்களின் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.  அதனால் இது குறித்து ஐயம் உள்ளது என்றார்.

புத்தகத்தை பார்த்து மாணவர்கள் வாசிக்கும் பயிற்சி நடைபெற்று வந்தவேளையில், குறிப்பிட்ட மாணவி வாசித்துக் கொண்டிருந்தபோது, அவரது தோளில் தட்டி உட்காரும்படி ஆசிரியர் தெரிவித்ததாகவும் அந்த விவகாரம் கிராமவாசிகள் மத்தியில் திரிவடைந்து தாக்குதல் வரை சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் பாடசாலையின் வாயில் கதவை திறந்தால் கொலை விழும் என எழுதப்பட்ட பதாகையை தொங்க விட்டு, எவரும் கதவைத் திறக்க விடாமல் பிரதேசவாசிகள் தடுத்துள்ளனர். இச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதனால் பாடசாலை கதவு திறக்கப்படவில்லை. ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலைக்கு வெளியில் நிற்கின்றார்கள்.

இதேவேளை பாடசாலை அதிபர், ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து நடவடிக்கை வேண்டும் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாடசாலையில் எத்தகைய சம்பவங்கள் நடைபெற்றாலும் அது சட்டரீதியாக அணுகப்பட்டு குற்றமிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்திற்கு மாற்றுக்கருத்துக் கிடையாது.

மாறாக சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது. அதிலும் அதிபர், ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்தி பாடசாலையை மூடி அடாவடியில் ஈடுபட எவருக்கும் உரிமையில்லை.

இதனால் ஒட்டுமொத்த அதிபர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதோடு அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகின்றது. இத்தகைய சம்பவங்களை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் நிகழாமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post