கிளிநொச்சியில் பெரும் சோகம்! பட்டினியால் உயிரிழந்த அரச ஊழியர்!!

கிளிநொச்சிப் பகுதியில் உண்ண உணவில்லாமல் பட்டினியால் அரசாங்க ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி-கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு வறுமையால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுப்பிரமணியம் பத்மநாதன் (வயது-44) என்ற அரச ஊழியரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கோணாவில் பகுதியில் தற்போது வசித்து வரும் குறித்த ஊழியர், யுத்த காலத்தில் இந்தியாவுக்குச் சென்று வாழ்ந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நாடு திரும்பியுள்ளார்.

இந் நிலையில் பட்டதாரி என்ற வகையில் அவர் கடந்த 2015 ஆம் ஆண்டில் அரச நியமனம் பெற்றிருந்தார்.

நோய்வாய்ப்பட்ட தாயார், நடக்க முடியாத சகோதரன் என மிகவும் வறுமையில் வாடிய இவர், இருப்பிடம் இன்மையால் கடனைப் பெற்று அதனை அமைத்துக் கொண்டார்.

இவ்வாறு கடன் பெற்ற நிலையில் அதற்குரிய தவணைப் பணம் கழிக்கப்பட்டு மிகவும் சொற்ப பணமே கையில் கிடைக்கும் நிலையில் அப் பணம் வைத்திய செலவிற்கே போதுமானதாக இருந்துள்ளது.

இதன் காரணமாக முழுமையான உணவு இல்லாமையால் கடுமையான நோய்வாய்ப்பட்ட நிலையில் சில சந்தர்ப்பங்களில் சக ஊழியர்கள் அவருக்கு உதவி புரிந்துள்ளனர்.

இவ்வாறு தொடர் வறுமையின் காரணமாக உணவின்றிப் பரிதாபகரமாக உயிரிழந்த அவரின் இறுதிக் கிரியைகளும் உதவிகள் மூலமே மேற்கொள்ள வேண்டிய அவல நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இந் நிலையில் அவரின் சகோதரன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்றால் ஒரு காலை அகற்றி விடுவர் என அஞ்சி வைத்தியசாலைக்கும் செல்ல மறுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post