யாழில் சடலம் எரியூட்ட மக்கள் எதிர்ப்பு! நடுவீதியில் சடலத்துடன் நிற்கும் உறவுகள்!! (படங்கள்)

சடலத்தை எரியூட்ட விடாது தடுக்கப்பட்டதால் புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மயானத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மயானத்தில் சடலம் எரியூட்டுவதற்கு தயாராவதற்கு உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்து மயானம் ஒன்று காணப்பட்ட நிலையில் அதனைச் சூழ பின்னர் குடியேறியவர்கள் அங்கு சடலங்களை எரிப்பதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்திவருவதாக அங்கு பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற மக்கள் நீதிமன்றினை நாடியிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று விசாரணையின் முடிவில் சுடுகாட்டினைப் பயன்படுத்த மல்லாகம் நீதிமன்றம் அனுமதி வழங்கித் தீர்ப்பளித்திருந்தது.

இருப்பினும் எதிர்த்தரப்பினர் யாழ்.மேல் நீதிமன்றில் அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டினை மேற்கொண்டிருந்தனர். யாழ்.மேல் நீதிமன்றமும் சுடலையைப் பயன்படுத்த அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியிருந்தது.

குறித்த சுடுகாட்டில் சடலங்களை எரியூட்டலாம் அல்லது புதைக்கலாம் என்று யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. குறித்த சுடலையை பயன்படுத்த இடையூறு விளைவித்தால் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் இருந்தது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அங்கு பூர்வீகமாக வாழ்ந்து வரும் மக்களால் சுடலையைச் சூழ சுற்றுமதில் அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட சுற்றுமதி அடையாளம் தெரியாதோரால் இடித்து வீழ்த்தப்பட்டது.

இதனையடுத்து சுடலையில் சடலங்களை எரியூட்டுவதற்கு முன்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு நீதிமன்றம் மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த வயோதிபர் ஒருவரின் சடலத்தினை இன்று அங்கு கொண்டு சென்று எரியூட்டுவதற்காக மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை முதல் அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்ட போதிலும் சடலம் எரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பகுதியினர் பொலிஸாரை நகர விடாமல் தடுத்துவைத்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சடலம் வீதியில் காணப்படுவதாகவும் இரண்டு பகுதியினரும் வீதியில் திரண்டிருப்பதாகவும் சடலத்தை எரியூட்ட முனையும் மக்களுடன் பொலிஸார் சமரச முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

இந் நிலையில் குறித்த மயானத்தில் சடலத்தை எரியூட்டவந்தவர்கள் மயானத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.










Previous Post Next Post