யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்கள் 50 பேர் திடீர் கைது!

இரண்டாம் இணைப்பு
வீதியில் பயணிப்போருக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் அனைவரும் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு இன்று மாலை 6 மணியளவில் அனைத்து மாணவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
வீதிகளில் பயணிப்போருக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்கள் சுமார் 50 பேர் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் வடக்கின் பேர் என அழைக்கப்படும் துடுப்பாட்ட போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

அதனை முன்னிட்டு யாழ்.மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலை சீருடையில், பாடசாலை கொடிகளுடன் பாண்ட் வாத்தியங்கள் இசைத்தவாறு வடி ரக வாகனங்களில் வீதிகளில் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

மாணவர்களின் இச் செயற்பாட்டால் வீதியில் பயணிப்போர் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததால் அது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்.பாடசாலைகளுக்கிடையில் நடைபெறும் துடுப்பாட்ட போட்டிகளின் போது குறித்த பாடசாலை மாணவர்கள் பாடசாலை சீருடைகளுடன் பாடசாலை கொடிகளை அசைத்தவாறு வீதிகளில் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.

வர்த்தக நிலையங்களுக்குச் சென்று பண சேகரிப்பிலும் மாணவர்கள் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதும் உண்டு.

அதேவேளை தமது சகோதர பாடசாலைகளான பெண்கள் பாடசாலைகள் முன்பாகவும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.

பாடசாலை நேரங்களில் பாடசாலையை விட்டு சீருடையுடன் வெளியேறும் மாணவர்கள் வீதிகளில் இவ்வாறான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவது தொடர்பில் வருடா வருடம் பாடசாலை அதிபர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் நிலையிலும் அது தொடர்பில் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது பாடசாலை அதிபர்கள் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post