இலங்கைக்குள் கொரோனாவை பரப்ப முயற்சி? இருவர் இனங்காணப்ப்பட்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது எட்டாக உயர்வடைந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.

இதேவேளை இன்று மதியம் உறுதி செய்யப்பட்ட இரண்டு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவரும் தமக்கு ஏற்பட்டிருந்த காய்ச்சலை மறைத்துக் கொண்டு, வீடு செல்ல முயன்றுள்ளனர். விமான நிலையத்தில் டிமிக்கி கொடுத்து வீடு செல்ல முயன்றபோதும் அது பலனளிக்காத விடயம் தற்போது வெளியாகியுள்ளது.

இத்தாலியில் இருந்து வந்திருந்த இருவரே கொரோனா தொற்றிற்கு இலக்காகியிருந்தனர். இத்தாலியின் மிலோனா நகரத்தில் இருந்து விமானப் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டபோது, தமது காரில் 800 மைல்களிற்கு மேல் பிரயாணம் செய்து பிறிதொரு விமான நிலையத்தில் இருந்தே இலங்கை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் இத்தாலியிலிருந்தபோதே காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் காய்ச்சலுடன் விமான நிலைய சோதனையைக் கடந்து செல்ல முடியாது என்பதால் பனடோல் மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரிகைகளை உட்கொண்டு காய்ச்சலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

விமானம் மூலம் இத்தாலியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்ததும், தனிமைப்படுத்தல் மையங்களிற்கு செல்ல மறுத்து, விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். பெரும் ரகளையின் பின் மற்றவர்களுடன் இணைந்துள்ளனர்.

எனினும் தமக்கு ஏற்பட்ட காய்ச்சல் பற்றி விமான நிலைய அதிகாரிகளிடம் அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

அவர்கள் மேலும் 16 பேருடன் பேருந்தில் கந்தக்காடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த இராணுவத்தினர் அவர்களை தனிமைப்படுத்தி மேலதிக பரிசோதனை மேற்கொண்டபோதே அவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மருத்துவர் அனில் ஜசிங்க தெரிவிக்கையில், இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்படாமல் வீடுகளுக்குச் சென்றிருந்தால் நிலைமை பாரதூரமாக மாறியிருக்கும் எனத் தெரிவித்தார்.

Previous Post Next Post