யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை மீது தேர்தல்கள் ஆணையாளரிடம் யாழ்.அரச அதிபர் முறைப்பாடு!

யாழ். மாவட்டச் செலயகம் மீது குற்றம் சுமத்தப்பட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவந்திருப்பதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான மாவட்ட செயலணிக் கூட்டம் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தல் நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று கொடையாளர்களின் நிவாரணத்தை ‘ஆட்டையை’ போட்ட அரசியல்வாதி என்று பிரதான தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.

அதே பிரதான தலைப்புச் செய்தியின் கீழாக “கச்சேரியில் இருந்து பொருட்களை களவாடும் கீழ்த்தர அரசியல் அம்பலம்” என்றும் “கொடையாளர் நிவாரணத்தை அங்கஜனிடம் அனுப்புங்கள் என்று மாவட்டச் செயலர் பணிப்பு” என்றும் அதற்கு கீழாக “சாடுகிறார் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் கூல்” என்றும் உப தலைப்புக்களில் குறிப்பிடப்பட்டு செய்திவெளியாகியிருந்தது.

குறித்த செய்தி வெளியாகிய பின்னர் குற்றம் சாட்டப்பட்ட அரசியல் பிரமுகர் குறித்த ஊடகத்தின் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே தன்மீதான குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்கும் வகையில் ஊடகங்களுக்கு விளக்கமளித்த மாவட்டச் செயலர் க.மகேசன், குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post