யாழில் தொடரும் அவலச் சாவுகள்! தனிமைப்படுத்தலால் ஏற்படும் மன அழுத்தமா?

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இரண்டு அகால மரணங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன் (வயது-37) என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அதேபோன்று நேற்று இளம் குடும்பப் பெண் ஒருவரும் தனது உயிரை மாய்த்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் கடற்கரை வீதி, குருநகரைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான பிரதீபா டில்ஷான் (வயது-31) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

கொரோனாவின் கோரப் பிடிக்குள் சிக்கி மக்கள் செய்வதறியாது திணறி நிற்கும் சூழ்நிலையில் இவ்வாறான இளவயது அகால மரணங்கள் மக்கள் மனங்களில் ஒரு வகை அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறான இளவயது அகால மரணங்கள் தொடர்பில் காரணங்கள் கண்டறியப்பட்டு அதற்கான சரியான விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் மருத்துவத்துறை சார்ந்தோர் உள்ளனர்.

இதேவேளை தற்போதுள்ள கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமூகத் தனிமைப்படுத்தலும் இதற்கு ஓர் காரணமாக அமைந்திருக்கலாம்.

அனைத்து மக்களும் முடக்கப்பட்டு, வீடுகளில் அடைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் குடும்ப உறவுகளுக்கிடையிலான கருத்து முரண்பாடுகள், குடும்பப் பிரச்சினைகள் என்பன அதிகரித்து இவ்வாறானதொரு துயர முடிவினை எடுப்பதற்கு ஏதுவான காரணியாக அமைந்திருக்கலாம்.

எனவே எது எவ்வாறாயினும், இது தொடர்பில் மனநல மருத்துவர்கள் ஆராய்ந்து, இந்த இளவயது அகால மரணங்களைத் தடுப்பதற்கான வழி வகைகளைக் கண்டறிவது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
இலகுநாதன் செந்தூரன்
பிரதீபா டில்ஷான்




Previous Post Next Post