யாழில் சட்டத்தரணியின் வீட்டுக்குள் புகுந்து இனந்தெரியாதோர் தாக்குதல்!

சட்டத்தரணி றோய் டிலக்சனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனத்தைத் வெளியிட்டுள்ள மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

பண்டத்தரிப்பில் இளவாலை பொலிஸ் நிலையத்துக்கு மிக அண்மையாக உள்ள சட்டத்தரணியின் வீட்டில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பின்னிரவு இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

சட்டத்தரணியை அச்சுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் எவருக்கும் பாதிப்பில்லை. சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிள் உள்பட பெறுமதியான பொருள்கள் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் கே.சுகாஷ் விடுத்துள்ள ஊடக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் பொருளாளருமான சட்டத்தரணி றோய் டிலக்சனின் ஆதனத்திற்குள் கடந்த வெள்ளிக்கிழமை (மே 22) நள்ளிரவு அத்துமீறிப் பிரவேசித்த ஆயுததாரிகள் சிலர் வீட்டின் உடமைகளுக்கும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிளுக்கும் வாளால் வெட்டி கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

சட்டத்தரணியின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி அடாவடித்தனமான செயற்பாட்டிற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் தனது மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கின்றது.

தொழில் ரீதியாக ஓர் சட்டத்தரணியாக தனது கடமைகளைச் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு மேற்கொண்டு வரும் றோய் டிலக்சனின் ஆதனத்தில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதலுக்கு எதிராக உரிய தரப்புக்கள் அனைத்தும் நடவடிக்கைகளை எடுத்து சட்டத்தரணிகளின் தொழில் செய்வதற்குரிய பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டுமென்று கோருகின்றோம்.

பாதிக்கப்பட்ட எமது உறுப்பினர் றோய் டிலக்சனுக்கு நீதி கிடைப்பதற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் பக்க பலமாக இருக்கும் என்பதோடு அவருக்கு நீதி கிடைப்பதற்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவிப்போம் என்ற உத்தரவாதத்தையும் வழங்கி நிற்கின்றது.

க.சுகாஷ்,
செயலாளர்,
சட்டத்தரணிகள் சங்கம், மல்லாகம்.
Previous Post Next Post