கொழும்பில் பொய்த் துப்பாக்கியைக் காட்டிக் கொள்ளை! சினிமாப் பாணியில் கைது செய்த பெண் பொலிஸ்!!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் மாறுவேடத்தில் நுழைந்து சுமார் 79 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு, தப்பிச் சென்றுகொண்டிருந்த வைத்தியரை இரண்டு உளவுத்துறை உத்தியோகத்தர்களும், பெண் பொலிஸ் அதிகாரியொருவருமே விரட்டிப் பிடித்துள்ளனர்.

நேற்று இந்த பரபரப்பான கொள்ளைச் சம்பவம் நடந்தது. கொள்ளையன் தப்பிச் சென்று கொண்டிருந்தபோது, அலுவலக தேவைக்காக கொழும்புக்கு தனது பிள்ளையுடன் வந்துகொண்டிருந்த பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த அதிரடியாக செயற்பட்டு கொள்ளையனை கைது செய்தார்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்த கொள்ளை தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

அண்மையில் தேசிய வைத்தியசாலைக்கு விஷேட வைத்திய நிபுணர் பயிற்சிகளுக்காக இடமாற்றம் பெற்று வந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்தஇ கொழும்பு கொட்டா வீதியில் தற்காலிகமாக வசிக்கும் 33 வயதுடைய வைத்தியர் ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் வேளையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பண்டாரநாயக்க கட்டிடத்தில் அமைந்துள்ள நிதி தொடர்பிலான கருமபீடத்துக்கு நபர் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றுடன் நுழைந்துள்ளார்.

தலைமுடியை வளர்தவராகவும், கழுத்துப்பட்டி அணிந்தவராகவும் அவர் காணப்பட்டுள்ள நிலையில், அப்போது அங்கிருந்த மூன்று நிதி கருமபீடங்களில் இளம் பெண்கள் சிலரும் ஒரு ஆண் உதவியாளரும் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஆண் உதவியாளரை நிலத்தில் குப்புற படுக்க வைத்துள்ள கொள்ளையர், இளம் பெண்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி மூன்று கரும பீடங்களிலும் இருந்த பணத்தையும் ஒரு கறுப்பு நிற பையில் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்த அனைவரும் திருடன் திருடன் என கத்தியுள்ளனர். அப்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் கடமையில் இருந்த இரு தேசிய உளவுத் துறை உத்தியோகத்தர்கள் குறித்த கொள்ளையனை துரத்தியுள்ளனர்.

அப்போது அந்த கொள்ளையன் பிரதான வீதிக்கு ஓடி வந்து அங்கு பாதையில் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது அந்த வழியால், நீதிமன்ற நடவடிக்கை ஒன்றுக்காகவும், பொலிஸ் தலைமையகத்தில் இருந்த ஒரு அலுவல் தொடர்பிலும் மாத்தறை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த, தனது பிள்ளையுடன் வந்துள்ளார்.

எதேர்ச்சையாக குறித்த கொள்ளையனை மக்கள் துரத்துவதைக் கண்டுள்ள அவர்இ சந்தேக நபர் தப்பிச் செல்வதை அவதானித்து உடனடியாக களத்தில் இறங்கி துரத்தியுள்ளார்.

இதன்போதே அவர் சென்ற முச்சக்கர வண்டியை மறித்து உடனடியாக குறித்த பெண் பொலிஸ் அதிகாரியும், தேசிய வைத்தியசாலையில் இருந்து வந்த இரு தேசிய உளவுத் துறையின் உறுப்பினர்களும் சேர்ந்து கொள்ளையனைக் கைது செய்துள்ளனர்.

இதன்போது, குறித்த பெண் அதிகாரி கொள்ளையனைக் கைது செய்ய முற்பட்ட போது கையில் இருந்த துப்பாக்கியால் கொள்ளையன் அச்சுறுத்தியுள்ள நிலையில், அப்போது பொலிஸ் அதிகாரியின் வாகனத்தில் இருந்த அவரது பிள்ளை பயத்தில் அழுதமையை அவதானிக்க முடிந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

அவ்வாறான பின்னனியில் கூட துணிகரமாக நிராயுதபானிகளாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்டோர் செய்த பணிக்கு பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் விஷேட பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரைக் கைது செய்ததும், அவர் கையில் வைத்திருந்த கைத்துப்பாக்கி விளையாட்டு துப்பாக்கி என பொலிஸார் கண்டறிந்தனர். அத்துடன் அவர் தனது வேடத்தை மாற்ற பொய்யான தலை முடியினை பயன்படுத்தியிருந்ததும் கண்டறியப்பட்டது.

உடனடியாக கைதுச் செய்யப்பட்ட சந்தேக நபரை மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க குறித்த பிரதான பெண் பொலிஸ் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனையடுத்தே மருதானை பொலிசார் ஸ்தலம் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன்போதே குறித்த கொள்ளையன் வைத்தியர் என்றும் வேறு ஒரு வைத்தியசாலையில் இருந்து அண்மையில் விஷேட வைத்திய நிபுணர் பயிற்சிக்காக தேசிய வைத்தியசாலைக்கு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. அத்துடன் வைத்தியரின் மனைவியும் ஒரு தாதி என தெரியவந்துள்ளது.

இந் நிலையில் தனியாக குறித்த கொள்ளையில் சந்தேக நபர் ஈடுபட்டாரா அல்லது அவருக்கு வேறு யாரேனும் இது தொடர்பில் உதவினரா என தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த டி சொய்ஸா ஆகியோரின் மேற்பார்வையில் விஷேட விசாரணைகள் இடம்பெறுகின்றன.

குறித்த சந்தேக நபரான வைத்தியருக்கு எதிராக எந்த முன் குற்றங்களும் இல்லாத நிலையில் கொள்ளையின் நோக்கத்தை கண்டறியவும் விஷேட விசாரணை நடாத்தப்படுவதாக பொலிஸார் கூறினர்.

தேசிய வைத்தியசாலையின் ஊழியர்களின் சம்பளம், மேலதிக கொடுப்பனவு, விஷேட கொடுப்பனவு தொடர்பில் வைக்கப்பட்டிருந்த பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டதாகவும், பொலிசார் சுட்டிக்காட்டினர்.

கொள்ளையிடப்பட்ட பணம் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
Previous Post Next Post