ஜனவரி மாத மின் கட்டணம் செலுத்தாத பாவனையாளர்களுக்கு மின் துண்டிப்பு!

2020ஆம் ஆண்டு ஜனவரி மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத பாவனையாளர்களின் மின் வழங்கல் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை கடந்த ஏப்ரல் மாதத்தில் 50 சதவீத மின் பாவனையாளர்களிடமிருந்தும், மே மாதத்தில் 65 சதவீதத்திற்கும் அதிகமான பாவனையாளர்களிடமிருந்தும், ஜூன் மாதத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பாவனையாளர்களிடமிருந்தும் மின் கட்டணத்தை அறவிட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் மின்சார கட்டணங்கள் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மின்சாரக் கட்டணம் செலுத்துவது தொடர்பான தற்போதைய நிலமை விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பை இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இன்று நடத்தினர். இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது;



கோவிட் – 19 தொற்றுநோய் தொடர்பாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வீட்டு மின் நுகர்வு அதிகரித்துள்ளது. கடைசியாக வழங்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணப் பட்டியல் சரியானது. முதல் பார்வையில் அதிக கட்டணம் வசூலித்ததாகத் தோன்றுகின்றது.

ஆனால் பாவனையாளர்கள் பயன்படுத்திய அலகுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அனைத்து பாவனையாளர்களுக்கும் தனிப்பட்ட மின்சார கணக்கு உள்ளன.

எனவே அதிகமாக செலுத்தப்பட்ட எந்தவொரு பணத்தையும் மீட்டெடுக்க முடியும். அல்லது அதிகப்படியான தொகையை செலுத்தியிருப்பின் அடுத்த மாத மின் பட்டியலைச் செலுத்துதலாகக் கழிக்க முடியும். 2020 மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத மின் கட்டணப் பட்டியல்களை தாமதமாகச் செலுத்தும் போது தாமதக் கட்டணம் வசூலிக்கப்படாது – என்றனர்.
Previous Post Next Post