யாழைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களைத் துரத்தும் அகால மரணங்கள்!

ஒரே மாதத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் அகால மரணம் அடைந்திருப்பது யாழ். மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்கொலை செய்து கொண்டதுடன், ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர்கள் மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, வெளியிடங்களில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆவர்.

இதில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் யாழ்.நல்லூர், அரசடி வீதியைச் சேர்ந்த ஜெயமூர்த்தி நிஷாந்த் என்பவர் கடந்த 03 ஆம் திகதி விபத்தில் உயிரிழந்திருந்தார்.
ஜெயமூர்த்தி நிஷாந்த்
இவரின் உயிரிழப்பு ஒரு புறம் இருக்க, ஏனைய இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதில் யாழ்.தென்மராட்சி, மீசாலை வடக்கைச் சேர்ந்த நமசிவாயம் டயஸ் (வயது-26) என்பவர் கடந்த 16 ஆம் திகதி மாதம்பை பொலிஸ் நிலையத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
 நமசிவாயம் டயஸ்
அத்துடன் நேற்றைய தினம் (19) அரச புனலாய்வுத் துறையில் கடமையாற்றும் யாழ்ப்பாணம் வடமராட்சி, கரணவாய் மத்தியைச் சேர்ந்த கே.கமலராஜ் (வயது-21) என்ற பொலிஸ் உத்தியோகத்தர், கல்முனை தலைமைப் பொலிஸ் பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு அலுவலகத்தில் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கே.கமலராஜ் 
மூன்று நாட்களுக்குள் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களின் தற்கொலை மரணங்களுக்கான காரணங்கள் காதல் தோல்வியாக இருக்கலாம் என பொலிஸ் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, இளவயதினர் எவராக இருந்தாலும் தற்கொலை செய்து கொண்டால் முதல் எழும் சந்தேகம் காதல் தோல்வி என்பதே உலக வழக்கமாகவுள்ளது. இதற்கு இந்த இரு இளம் பொலிஸ் உத்தியோகத்தர்களும் விதிவிலக்கல்ல.

எனவே இவர்களின் உயிரிழப்புக்கள் யாழ்ப்பாண மண்ணின் எதிர்காலத்தின் உயிரிழப்புக்களாகவே பார்க்கப்படுகின்றது. அத்துடன் இவ்விருவரின் உயிரிழப்புக்கள் தொடர்பில் சரியான, உண்மைத்தன்மையை பொலிஸ் தரப்பு வெளியிட வேண்டும்.ஏனெனில் உண்மையில் இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக இருந்தாலும் கூட, பணியிடங்களில் ஏற்பட்ட மன அழுத்தங்கள், உயரதிகாரிகளின் பழிவாங்கல்கள் என்பனவும் இதற்கு ஓர் காரணமாக அமையலாம்.

எடுத்த எடுப்பில் காதல் விவகாரத்தை இழுப்பது அவருக்கும் அவர் சார்ந்த குடும்பத்துக்கும் சமூகத்தில் பெரும் பாதிப்பையும் அவப் பெயரையும் ஏற்படுத்தி விடும்.

எனவே இவ்விரு பொலிஸ் உத்தியோகத்தர்களின் தற்கொலைக்கான சரியான காரணத்தினைக் கண்டறிவதன் ஊடாக, மேலும் இடம்பெறப் போகும் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்தி; விட முடியும் என்பது நிறுத்திட்டமான உண்மை.

ஆகவே இச் சம்பவம் தொடர்பில் ஆக்கபூர்வமான, விரிவான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

அதேநேரம் தமிழர் பகுதிகளில் இடம்பெறும் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் நிலையில், உரிய தரப்பினர் அதனைத் தடுக்கும் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.இவற்றினாலேயே எதிர்காலத்தில் இளவயது அகால மரணங்களைத் தடுத்து நாட்டின் எதிர்கால சந்ததியினரின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இதேவேளை மன ரீதியான பாதிப்புக்களால் ஏற்படும் தற்கொலை மரணங்கள் இளவயதினர் மத்தியில் அதிகரித்துச் செல்கின்றமை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

எனவே இவ் விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் அதீத கவனம் எடுத்து, இளையோர் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி இத் தற்கொலைக் கலாசாரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைவரினதும் கோரிக்கையாகவுள்ளது.

Previous Post Next Post
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்