முகக் கவசங்களில் கட்சிச் சின்னங்கள்! தவிர்க்க கோரும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு!!

முகக்கவசங்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்களை பொறித்து பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முகச்கவசங்களில் கட்சிகளின் சின்னங்கள் மற்றும் தங்களின் விருப்பிலக்கங்களை பொறித்து அவற்றை சில அரசியல்வாதிகள் பொதுமக்களிற்கு வழங்குகின்றனர் என தெரிவித்துள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் இதனை கண்டித்துள்ளது.

சுகாதார நெருக்கடியினை பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற முயல்வதை அரசியல்வாதிகள் தவிர்க்கவேண்டும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாங்கள் சில தரப்பினர் தங்கள் கட்சியின் சின்னங்களும் விருப்பிலங்கங்களும் பொறிக்கப்பட்ட முகக்கவசங்களை மக்களிற்கு வழங்கியுள்ளதை அவதானித்துள்ளோம் என தெரிவித்துள்ள அவர் இது ஏமாற்றமளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

சுகாதார நெருக்கடியின் போது இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளவேண்டும், வாக்காளர்கள் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், வேட்பாளர்கள் இதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post