கரும்புலிகள் தினத்தில் தாக்குதல் முயற்சி! ஒருவர் உயிரிழப்பு!! இருவர் கைது!!!

கிளிநொச்சி பளை பகுதியில் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிட்டு, மேலும் இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பளை இயக்கச்சியில் கடந்த 3ஆம் திகதி வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. சி4 வெடிமருந்தை பயன்படுத்தி உள்ளூர் வெடிகுண்டு தயாரிக்க முயன்ற நிலையில், அது தவறுதலாக வெடித்ததில், குண்டு தயாரித்தவர் காயமடைந்திருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.


இந் நிலையில் தடயங்களை அழிக்க முயன்றது உள்ளிட்ட குற்றங்களிற்காக அவரது மனைவி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வட்டக்கச்சி பகுதியில் வைத்து, இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த இரத்தினசிங்கம் கமலாகரன் (40) என்ற 3 பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டார்.  முன்னாள் போராளியான அவர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந் நிலையில்  உயிரிழந்தவருடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டில், அளவெட்டியை சேர்ந்த வைத்திலிங்கம் நிர்மலதாஸ் (38) என்பவர் கொடிகாமத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


அதேவேளை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.  உயிரிழந்தவருடன் தொலைபேசியில் பேசினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான பெண் உள்ளிட்ட இருவரே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நடத்தப்பட்ட விசாரணையில் கரும்புலிகள் தினத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்றை நடத்த திட்டமிட்ட தகவல் வெளியானதாக, பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post