யாழ்.பல்கலை, சித்த மருத்துவ மாணவிகளின் கொரோனா முடிவுகள் வெளியாகின!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கம்பஹாவைச் சேர்ந்த மாணவி மற்றும் கைதடி சித்த மருத்துவ பீடத்திலிருந்து கொரோனா அறிகுறி என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஆகிய இருவருக்கும் கொரோனா இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் ஊடகவியலாளர்கள் மத்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வளாகத்தில் கம்பஹாவைச் சேர்ந்த மாணவியின் சகோதரன் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை அடையாளம் காணப்பட்ட நிலையில் கிளிநொச்சி வளாகத்தின் விடுதியில் தங்கியிருந்து கல்வி பயிலும் குறித்த மாணவிக்கும் கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு அவரின் இரத்த மாதிரியும் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டிருந்தது.

அதேபோல பொலநறுவையிலிருந்து யாழ்.சித்த மருத்துவ பீடத்திற்கு கற்பதற்காக வந்து காய்ச்சல் காரணமாக நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவியிடமும் கொரோனா தொடர்பிலான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மற்றும் யாழ்.சித்த மருத்துவ பீட மாணவி ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post