191 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்து நொறுங்கியது!

துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதால், விமானி பலியாகியிருப்பதாகவும், பயணிகள் பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் Air India Express நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர சென்றது.

அதன் படி, பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என மொத்தம் 191 பேருடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கூடுக்கு புறப்பட்டு வந்துள்ளது.

விமானம் சரியாக இன்று உள்ளூர் நேரப்படி 7.41 மணிக்கு தரையிரங்கிய போது, விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி விபத்தில் சிக்கியுள்ளது. இதில் விமானம் இரண்டாக உடைந்து நொறுங்கியதால், உடனடியாக தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்.

மேலும் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்துவிட்டதாகவும், துணை விமானி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சுமார் 30 முதல் 40 பயணிகள் காயங்களுடன் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இன்னும் சில விமானத்திற்கு இடையில் சிக்கியிருப்பதால் உயிர் சேதம் அதிகமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக அவசர நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

மீட்பு மற்றும் மருத்துவ உதவிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post