தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் பிளவு! பதவிகளைப் புடுங்கிப் பழிதீர்க்கும் படலம் ஆரம்பம்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இலங்கையில் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஈழப் போர் மௌனிக்கப்பட்ட பிற்பாடு அதாவது, 2009 ஆம் ஆண்டுக்குப் பின் அரசியல் ரீதியான தந்திரோபாய நகர்வுகளை மேற்கொள்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறி மக்களிடம் வாக்குகள் பெற்றிருந்தது.

ஆனால் தமிழ் மக்கள் சார்ந்த உரிமை விடயத்தில் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளாது, மாறாக சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு, வெளியில் தேசியம் தொடர்பில் பேசி தங்களின் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டிருந்தனர்.


இவர்களின் குள்ளநரி வேடத்தைப் புரிந்து கொண்ட மக்கள் கடந்த 05 ஆம் திகதி நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சரியானதொரு பாடத்தைப் புகட்டியுள்ளனர்.

இதனால் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த பதவிப் போட்டி, தற்போது பூகம்பமாக வெடித்துப் பொதுவெளியில் போர் தொடுக்கும்படி ஆகிவிட்டது.

தமிழரசுக் கட்சித் தலைமைத்தவத்தை மதிக்காது, தான்தோன்றித்தனமாகச் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர் செயற்படுவது மற்றும் தேசியப் பட்டியல் நியமனத்தில் ஏற்பட்ட இழுபறிகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மை முகத்தை மக்கள் முன் நிறுத்தி விட்டது.


இது இவ்வாறிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்திதான் நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் மாற்றுத் தெரிவை மேற்கொள்ள அத்திபாரமாக அமைந்திருந்தது. அதன் ஒரு தெரிவுதான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

தற்போது அந்த முன்னணிக்குள்ளும் உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்ட மனக்கசப்பு தற்போது வெடித்து, அக் கட்சியின் உண்மை முகத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. அதாவது அக் கட்சியின் ஊடகப் பேச்சாளராக இருக்குக் கூடிய சட்டத்தரணி மணிவண்ணன் அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உட்கட்சி மோதல் தற்போது பகிரங்கமாக வெடித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் உண்மை முகத்தை படம் போட்டுக் காட்டியுள்ளமை தமிழர்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது.


இவர்களின் இவ்வாறான செயற்பாடுகள்தான் தமிழர் பகுதிகளில் சிங்களக் கட்சிகள் காலூண்றுவதற்கு ஏதுவாக அமைகின்றது என்பது நிறுத்திட்டமான உண்மை.

இவ்வாறு ஒரு கட்சியைக் கூட ஒற்றுமையாக கொண்டு செல்ல முடியாத இந்தத் தமிழ்த் தேசியக் கட்சிகள், எவ்வாறு தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பார்கள் என்பது கேள்விக்குறியே. அதிலும் உரிமைகள் வென்றெடுக்கப்பட்டாலும் அதனைப் பங்குபோட்டும் சண்டையில் அதனைத் திருப்பிக் கொடுக்கும் நிலை நிச்சயம் வரும்.

ஒருவேளை தனி நாடு கிடைத்தால் அதற்குள்ளும் இன்னொரு தனிநாடு கோரிப் போராட்டம் வெடிக்கும் என்றால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைப் பலம் உலகறியப்பட்டுள்ளது.


இன்று இலங்கையில் ராஜபக்ஷாக்களின் வெற்றி என்பது வெறுமனமே இனவாதத்தை வைத்துப் பெற்றுக் கொள்ளப்பட்ட வெற்றியாகப் பார்க்க முடியாது. மாறாக அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கிடையில், அக் கட்சி அங்கத்தவர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமைதான் அவர்களின் இந்தப் பெரு வெற்றிக்கு வித்திட்டது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

எனவே இந்தத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையீனம், எதிர்காலத்தில் மாற்றுக் கட்சியை மக்கள் தெரிவு செய்ய முற்படுவதற்கு வழிஏற்படுத்தும் அல்லது சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் சூழ்நிலையை உருவாக்கும் என்பதைத் தடுக்க முடியாது.


இதேவேளை புதிய கட்சியை உருவாக்கி, குறுகிய கால இடைவெளியில் தங்களை மக்கள் முன் நிறுத்தி வாக்குக் கேட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு ஒரு ஆசனத்தை வழங்கி மக்கள் ஆணையிட்டுள்ளனர்.

மக்களின் ஆணையைச் சிறந்த முறையில் முன்னெடுத்து, ஒற்றுமையாகச் செயற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஒரே தெரிவு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாகத்தான் இருக்க முடியும்.
Previous Post Next Post