மணிவண்ணன் விவகாரம்! முன்னணிக்குள் நடந்தது என்ன? -புலனாய்வு றிப்போட்


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இன்றைய பரபரப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உட்கட்சி மோதல்தான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பு வாக்குப் போட்டியை – அதன் உள்ளக முரண்பாடுகளை கடந்த தேர்தலில் அதிகம் விமர்சித்த கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான்.

ஆனால், அவர்களுக்குள்ளும் நீறு பூத்த நெருப்பாக இருந்த உள்கட்சி முரண்பாட்டை தேர்தல் முடிந்ததுமே தாமே அப்பட்டமாக போட்டுடைத்துள்ளார்கள்.

இந்த விவகாரத்தால்தான் அந்தக் கட்சியை – அதன் ஆதரவாளர்களே நார் நாராக உரித்துத் தொங்க விட்டுள்ளனர். அதேநேரம் இந்த விவகாரத்தைத் தொடர்ந்தும் கிண்டிக் கிளறி – உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள் மற்ற இரு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவாளர்கள்.

இந்தப் பிரச்சினைக்கான தொடக்கப்புள்ளி எங்கே வைக்கப்பட்டது? ஒரே உறையில் இரு வாள்கள் இருக்க முடியுமா என்று நம் மத்தியில் ஒரு வழக்கு இருக்கிறது.

அதுபோல், மணிவண்ணன் – சுகாஷ் என்ற இரு வாள்கள் ஒன்றை ஒன்று உரசின. இந்த உரசல் முன்னணியின் சட்டத்தரணிகளில் ஒருவரான சுகாஷின் இடம்பிடிப்புடன்தான் தொடங்கியுள்ளது.

ஆரம்பத்தில் மணி மற்றும் சுகாஷ் இருவரும் ஒற்றுமையாகவே இருந்தபோதிலும் சில விடயங்களும் – காலமும் இருவருக்கும் இடையிலான தூரத்தை மெல்ல மெல்ல அதிகரித்தது. கட்சி என்றாலே கஜேந்திரகுமார், கஜேந்திரன் என்றிருந்த காலம் மாறி, அவர்களுக்கு சரிசமமாக மணிவண்ணன், சுகாஷின் பெயர்களும் அடிபடத் தொடங்கின.

இருவர் அணி ஆரம்பித்த முன்னணி, இந்தப் பத்து ஆண்டுகளில் நால்வர் அணியாக மாறிப் போனது. கட்சியின் வளர்ச்சி – கட்சிக்குள் அடுத்தது யார் என்ற போட்டி பெரும் போட்டியாக மாறத் தொடங்கியது. இதனால் ஒருவரை ஒருவர் வெட்டி விடும் வேலையை மூன்றாம் நான்காம் இடங்களில் இருந்தவர்கள் பார்த்த அதே சமயம் கட்சித் தலைவருடன் மற்றவர்களை நெருங்க விடாமல் இரண்டாமிடத்தில் இருந்தவர் பார்த்துக் கொண்டார்.

தேர்தலுக்கு முன்பாக, வழக்கு ஒன்றின் பிணைப் பணம் ஒன்றை சுகாஷ் மோசடி செய்து விட்டார் என்ற செய்தி ஒன்று வலைதளங்களில் உலா வந்தது. இதனை தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர் ஒருவர் மூலம் மணிவண்ணனே கசிய விட்டார் என்று கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது.

இதுகுறித்துக் கட்சித் தலைமை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால் தேர்தலைக் காரணம் காட்டியும் உண்மையில் யார் மூலம் தகவல் வழங்கப்பட்டது என்பது தெரியாததாலும் தேர்தல் முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி அந்த விடயம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறுக்கிட்டது. இதனை ஒரு வார கால நினைவேந்தலாக அனுஷ்டிக்க கட்சி முடிவு செய்து – தமிழினப் படுகொலைகள் இடம்பெற்ற இடங்கள் தோறும் சென்று நினைவேந்தல்களைச் செய்தனர்.

கொரோனா தொற்றுக் காலத்தைச் சாட்டாக வைத்து அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். இது தொடர்பில் நடந்த வழக்கை மணிவண்ணனின் சகோதரரான திருக்குமரன் கையாண்டார்.

கட்சியினர் அனைவருக்குமான பிணை விண்ணப்பத்தை அவரே தயாரித்திருந்தார். இடையில் அவரிடம் இருந்த விண்ணப்பத்தை சுகாஷ் பெற்றிருந்தார் என்றும், அதனை வேறு ஒரு சட்டத்தரணி மூலமே நீதிபதியிடம் வழங்கினார் என்றும் கூறப்பட்டது.

இதன்போது மணிவண்ணனின் பெயர் மீது கீறல் / வெட்டு விழுந்துள்ளது. இந்த விடயம் சட்டத்தரணி திருக்குமரனுக்கு தெரிய வரவே அவர் வேறு ஒரு பிணைப் பத்திரத்தை பூர்த்தி செய்து நீதிபதிக்கு வழங்கினார் என்றும் சொல்லப்பட்டது.

மணிவண்ணனின் பெயர் திட்டமிட்டே வெட்டப்பட்டது என்றும், இந்த விடயம் சட்டத்தரணிக்கு தெரிய வந்திருக்காவிடின் மணிவண்ணனுக்கு பிணை மறுக்கப்பட்டிருக்கும் என்றும் அவர்கள் தரப்பில் அப்போது சொல்லப்பட்டது.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணிவண்ணன் தரப்பினர் கட்சித் தலைமையைக் கோரினர். இதற்கும் தேர்தலைக் காரணம் காட்டி கட்சியினர் எதுவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

பின்னர், தேர்தலில் விருப்பு வாக்கு விடயத்திலும் மூன்றாம் நான்காம் இடத்தில் இருந்தவர்கள் மோதிக் கொண்டனர். கட்சியின் முதலிருவரும் தமக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்தினர். இதைப் புரிந்து கொண்ட மணிவண்ணன் தனி வழி ஓடத் தொடங்கினார்.

அதேநேரம் கட்சித் தலைமைக்கு ஏற்றவாறு நடந்தும் – புகழ்ந்தும் அவருக்கு மேலும் நெருக்கமான அதேசமயம் கட்சியின் ‘இரண்டு’ ஐயும் உச்சி குளிரச் செய்தார் சுகாஷ்.

அவரின் பேச்சாற்றல் கட்சியில் அதற்கேற்ற பதவியைப் பெற்றுத் தந்து விடும் என்றும் அப்போதே கணக்குப் போடப்பட்டது. மணிவண்ணனிடம் இருந்து பேச்சாளர் பதவியைப் பறிப்பது தொடர்பில் காய்கள் நகர்த்தப்பட்டபோது மணிவண்ணன் இசைந்தும் கொடுக்காமல் தனக்கே உரிய அமைதியையும் – இறுக்கத்தையும் வெளிப்படுத்தினார்.

தேர்தல் சமயத்தில் எதுவும் வேண்டாம் என்று அமைதி காத்தனர் கட்சியின் நம்பர் 1, நம்பர் 2 நபர்கள். கட்சியில் இரண்டாம் இடம் எப்போதும் தனக்கானதாகவே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவரும், தன் பங்குக்குக் காய் நகர்த்தினார்.

இதனால் கட்சியில் மிக வேகமான வளர்ச்சியைக் காட்டிய மணிவண்ணனை கட்சித் தலைமைக்கு துரோகியாகவும் – விரோதியாகவும் காட்டும் வேலை மும்முரமானது.

முரண்பாடுகளால் சுகாஷிடம் இருந்து மணிவண்ணன் விலகியிருந்ததைச் சாதகமாக்கிய கட்சியின் நம்பர் 2, தங்கள் இருவருடனும் எப்போதும் சுகாஷ் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். ஆகவே கட்சியில் இருந்து மணிவண்ணன் எப்போதும் எட்டியே நடந்தார்.

இதனிடையே ஒருவரின் தொகுதிக்குள் அவரின்றி – அவரின் சம்மதமின்றி பிரசாரம் செய்யக்கூடாது என்ற திட்டத்தை கட்சிக்குள் நடைமுறைப்படுத்தினர். இது வழக்கமாக பெரிய கட்சிகள் எல்லாவற்றிலும் இருப்பதுதான்.

வட்டுக்கோட்டைத் தொகுதி சுகாஷின் சொந்தத் தொகுதியாகவும் நல்லூர் தொகுதி மணிவண்ணனின் சொந்தத் தொகுதியாகவும் இருந்தன. இருவரும் முரண்பட்டே நின்றதால் ஒருவரின் அனுமதியை ஒருவர் பெறாமல் இருவருமே இரு தொகுதிகளிலும் பிரசாரம் செய்தனர்.

மணிவண்ணனின் தந்தையார் தீவகத்தைச் சேர்ந்தவர். தீவகப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பலர் வட்டுக்கோட்டைத் தொகுதியில் வசிக்கின்றனர். இந்த வாக்குகள் அவருக்கு இலகுவாகக் கிடைத்து விடும் என்பதால் தனது சம்மதமின்றி தொகுதிக்குள் நுழைந்தார் – தனக்கு எதிராக வாக்குகளைத் திருப்புகிறார் என்று கட்சியின் தலைமைக்குத் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை அளித்தார் சுகாஷ்.  அதேவேளை அவரும் அதனையேதான் செய்து வந்தார்.

கட்சித் தலைமைக்கு சுகாஷின் முறைப்பாடுகள் மட்டுமே கிடைத்ததால் அல்லது கிடைக்குமாறு செய்யப்பட்டதால் கட்சியின் தலைமை மணிவண்ணனை எதிராகவே பார்க்கத் தொடங்கியது. கட்சியின் தலைமையைச் சந்திக்காமல் தனியாகவே பிரசாரத்தை முன்னெடுத்த மணிவண்ணன், நம்பர் 1, நம்பர் 2 இன் மீதான கோபத்தில் அவர்களுக்கான பிரசாரத்தை நிறுத்தி தனியே தனக்கு மட்டுமான பிரசாரமாக மாற்றிக் கொண்டார். இதுவும் கட்சிக்குள் பற்ற வைக்கப்பட்டது.

தேர்தல் முடியும் வரை பொறுமை காத்த கட்சியினர். முடிந்ததுமே கேட்டுக் கேள்வி – விசாரணை ஏதுமின்றி தமது முடிவை அறிவித்தனர். இது நடந்தும் வழக்கம்போல் அமைதியையே மணிவண்ணன் கடைப்பிடித்து வருகின்றார்.

இதற்கிடையில் முன்னணியின் தேசியப் பட்டியல் நியமனத்தை கிழக்குக்குக் வழங்குவது குறித்து மணிவண்ணன் பரிந்துரைத்தார் என்றும் ஒரு தகவல்.

இந்நிலையில் ஊடகவியலாளர் ஒருவர் கஜேந்திரனை தொடர்பு கொண்டார். கட்சியின் பிரச்சினை தொடர்பில் பேசியவர், மணிவண்ணன் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்று கேட்டார். “கட்சிக் கொள்கைகளை மீறினார் என்று பதிலளித்தார் கஜேந்திரன். “அவர் மீறிய கொள்கைகள் என்ன” என்று கேட்டார் ஊடகவியலாளர். “வேறு அலுவலாக நிற்கிறேன்” என்றுவிட்டு அழைப்தைத் துண்டித்தார் கஜேந்திரன்.

மணிவண்ணனின் பதவி நீக்கம் வெறுமனே சுய அரசியல் இலாபம் கருதியது என்கிறார்கள் சிலர். அதேசமயம் கூட்டமைப்பின் சுமந்திரன், மணிவண்ணன் இரகசிய சந்திப்பும் காரணம் என்கிறார்கள். இந்தச் சந்திப்பு நிகழ்ந்தமை உறுதியானது என்று கூறினாலும், அது தேர்தலின் பின்னர் – மூத்த சட்டத்தரணி என்ற அடிப்படையில் என்கிறார்கள்.

ஆனால் இந்தச் சந்திப்பு நடந்ததா? கட்சிப் பிரச்சினைக்கு இது காரணமா? எல்லாமே புரியாத புதிராக – மர்மமாகவே உள்ளது.
Previous Post Next Post